திரையுலகில் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை எட்டியிருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே தனது 65வது பிறந்தநாளை கடந்த நவ.7 கொண்டாடிய கமல்ஹாசன், பரமக்குடியில் தனது தந்தையின் சிலையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் தனது குருவும், பிரபல இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து திறந்து வைத்தார்.
இதையடுத்து, சென்னை சத்யம் திரையரங்கில் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான கல்ட் திரைப்படமான ‘ஹேராம்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் கமல்ஹாசன் ஒரு தந்தையாக, ஒரு நடிகராக, ஒரு அரசியல்வாதியாக எப்படிப்பட்டவர் என்பதை அவரது மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் நம்மிடையே பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், “அப்பா, நடிகர், அரசியல்பாதி இவை அனைத்திற்கும் ஒரு கனெக்ட் இருக்கிறது. அப்பா மனதில் தோன்றுவதை அறிவை பயன்படுத்தி செயல்படுத்துவார். சிறு வயதில் எங்களை கொஞ்சியதில்லை, பெரியவர்கள் போன்று எங்களின் கருத்தை கேட்பார். இதுக் கூடாது என்றால் அது என்ன, ஏன் என விளக்குவார்” என்றார்.
“அப்பா பெரிய நடிகர் என சிறு வயதில் தெரியாது. ஒரு நாள் வீட்டிற்கு லேடி கெட்டப்பில் வருவார், மறுநாள் புலி கெட்டப், இன்னொரு நாள் இந்தியன் தாத்தா கெட்டப். அப்போதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். ‘ஹேராம்’ படம் எங்களது குடும்ப திரைப்படம். அதில் நானும் ஒரு பங்கு என்பதில் பெரு மகிழ்ச்சி. அப்பாவின் கலை சேவை பார்த்து பெருமைப்படுகிறேன்” என ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.
“ஒரு முறை கலைஞன் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது அப்பாவுக்கு பெரிய விபத்து நடந்துவிட்டது. ஸ்கூலுக்கு என்னை அழைக்க வந்த அப்பாவின் மேனேஜர், உங்க அப்பாவுக்கு Accident ஆகிவிட்டது பிழைப்பாரா என்று தெரியாது என்றார். நான் பயந்துவிட்டேன். மருத்துவமனையில் சுய நினைவின்றி இருந்த அப்பா மீண்டு வந்தால் சூப்பர் ஹீரோ தான் என நினைத்தேன். அப்பா மீண்டு வந்தார் இன்னும் வீர்யத்துடன். அவருக்கு இருக்கும் வில் பவர் யாரிடமும் நான் பார்த்ததில்லை” என வியந்து கூறினார்.