உலகமே கொரோனா அச்சுறுத்தலில் மூழ்கியிருக்க, திரையுலகம் முடங்கிக் கிடக்கிறது. சமீபத்தில்தான் சில படப்பிடிப்புக்களுக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், நடிகர் நடிகைகள் தங்கள் வீட்டில் குடும்பத்தாருடன் நேரத்தை செலவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இயங்கி வரும் ஷரத்தா ஸ்ரீநாத் நேற்று ஒரு பதிவை எழுதியிருந்தார். அதில் அவர் ஏன் நாத்திகவாதத்தை பின்பற்றத் தொடங்கினார் என்பதையும், பெண்ணியவாதியாக மாறியது ஏனென்ற காரணத்தையும் கூறினார்.
அந்தப் பதிவில் ஷரத்தா கூறியிருப்பது, ‘எனக்கு அப்போது 14 இருக்கும். ஒரு குடும்ப பூஜையில் கலந்து கொள்ள சென்றிருந்தோம். என் அம்மா வரவில்லை, அதனால் நான் என் அத்தையின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன், அப்போது எனக்கு பீரியட்ஸ் வந்துவிடவே என்ன செய்வதென்று சங்கடமாகிவிட்டது. அதைப் பற்றி கவலையுடன் அத்தையிடம் தெரிவித்தேன் (ஏனென்றால் நான் சானிட்டரி பேடை எடுத்துச் செல்லவில்லை).
அருகில் உட்கார்ந்திருந்த இன்னொரு பெண், என்னைப் பார்த்து நான் கவலைப்படுவதைக் கேட்டு, என்னிடம் சொன்னார், “பர்வகிலா சின்னா, தேவாரு க்ஷமிஸ்டாரே என்றார். அதாவது கவலைப்படாதே குழந்தை, கடவுள் உன்னை மன்னிப்பார்” என்பதுதான் அது. பீரியட்ஸ் சமயத்தின் போது பூஜையில் கலந்து கொண்டதற்காக அவர் அப்படி கூறினார்). அந்த நொடியில்தான் நான் ஒரு பெண்ணியவாதியாகவும், கடவுள் நம்பிக்கையற்றவளாகவும் மாறினேன். அப்போது எனக்கு 14 வயதுதான்
’
ஷ்ரத்தாவின் இந்த உருக்கமான பதிவு நெட்டிசன்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.