திரைத்துறையில் பிரம்மாண்ட இயக்குநர் என்று அறியப்படுபவர் இயக்குநர் ஷங்கர்.
தமது முதல் படமான ‘ஜெண்டில்மேன்’ திரைப்படத்தில் அர்ஜூனை இயக்கிய ஷங்கர், தொடர்ந்து பல இந்திய திரைப்படங்களை பரபரப்பான அரசியல், ஆக்ஷன், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் சமூக களங்களில் இயக்கியுள்ளார்.
அதிர்வை உண்டுபண்ணும் ஷங்கருடைய திரைப்படங்களாக ஜெண்டில்மேன் படத்தைத் தொடர்ந்து இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் என ஷங்கர் இயக்கிய பல திரைப்படங்கள் வெகுஜன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படங்களாக அமைந்தன. இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது.
இதனிடையே இயக்குநர் ஷங்கரின் 2வது மகளான அதிதி ஷங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகும் செய்தி போஸ்டருடன் வெளியாகி திரைத்துறையை திரும்பி பார்க்க வைத்தது. இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் உருவாகும் விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார், மாநகரம் புகழ் எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, அனல் அரசு சண்டைப் பயிற்சி அளிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம், தேனி பகுதியில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நடிகை அதிதி ஷங்கர் தற்போது மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருப்பதை பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார்.
இதனையொட்டி சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் நடிகை அதிதி ஷங்கர் பட்டம் பெறும் புகைப்படமும், அதன் பின்னர் அத்தி பெற்ற எம்.பி.பி.எஸ் பட்டத்துடன் ஷங்கரின் குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜெண்ட்டில்மேன் திரைப்படத்தி அர்ஜூன் மற்றும் வினீத் கதாபாத்திரங்கள் டாக்டர் ஆகும் கனவுடன் இருப்பதை காணமுடியும். இந்நிலையில் அதிதி டாக்டர் ஆகியிருப்பது, இயக்குநர் ஷங்கரின் முதல் படமான ஜெண்டில்மேன் படத்தை நெகிழ்ச்சியுடன் நினைவூட்டுகிறது.
இளம் ஹீரோயின்களில், பிரேமம், மாரி பட புகழ் நடிகை சாய் பல்லவிக்கு அடுத்ததாக நடிகை அதிதி ஷங்கர் மருத்துவத்துறையில் (எம்.பி.பி.எஸ்) டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.