நடிகர் அஜித் குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள நிலையில், அதில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். கடந்த பிப்ரவரி மாதம், அஜித் நடிப்பில், H வினோத் இயக்கத்தில் உருவாகி இருந்த வலிமை திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக இயக்குனர் H. வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் கூட்டணி வைத்துள்ள அஜித் குமார், துணிவு படத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்த திரைப்படம், அடுத்த பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவை நீரவ் ஷா மேற்கொண்டு வருகிறார்.
துணிவு படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், பாடல்கள் வெளியீடு உள்ளிட்ட அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலையில், அஜித் குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.
அமர்க்களம் திரைப்படத்தில், நடிகர் அஜித் குமாருடன் இணைந்து ஷாலினி நடித்திருந்த போது இருவருக்கும் இடையே காதல் உருவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, இருவரும் திருமணமும் செய்து கொண்ட நிலையில், அஜித் குமார் - ஷாலினி தம்பதியினருக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
அப்படி ஒரு சூழலில் தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள ஷாலினி அஜித், தனது கணவர் அஜித் குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் Lyon நகரில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தையும் இன்னொரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் ஷாலினி. இன்ஸ்டாகிராமில் இணைந்து புதிதாக அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களையும் ஷாலினி பகிர்ந்துள்ள நிலையில், இவை ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.