சென்னையில் இயங்கிவரும் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பிரபல காமர்ஸ் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதனிடையே ஆசிரியர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் உள்ளிட்டோரிடம் 2 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே இதுபற்றி திரைப் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருவதோடு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலரும் இந்த விசாரணையை முடுக்க வேண்டும் என்று அழுத்தம் தந்து கொண்டிருக்கின்றனர். அண்மையில்தான் இந்த விவகாரம் பற்றி பாடகி சின்மயி, நடிகை லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி உள்ளிட்ட பலரும் பேசினர்.
இதேபோல் இந்த பள்ளியின் பொருளாளராக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவருடைய மகள் மதுவந்தி உள்ளிட்டோர் இதுகுறித்த புகார் தங்கள் தரப்புக்கு வந்ததாகவும் இதுபற்றிய நடவடிக்கை எடுப்பதற்கு தாங்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகர் அருண் தம்முடைய சமூக வலைப்பக்கத்தில் இந்த விவகாரம் பற்றி தீவிரமாக பேசி பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், “இந்தப் பள்ளி விவகாரத்தில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த ஆசிரியர் ராஜகோபாலனின் பெயரை சொல்வதற்கே கூச்சமாக இருக்கிறது. என் வாயில் வண்டை வண்டையாக வருகிறது. இப்படியான பள்ளிகளில் அட்மிஷன் கிடைப்பது கடினம் என்று நாம் பலரை நாடி இப்படியான மதிப்புகள் நிறைந்த பள்ளியில் சேர்க்க முற்படுகிறோம். ஆனால் ஐந்து வருடமாக ஒரு ஆள் இப்படி மாணவிகளை டார்ச்சர் செய்து இந்த வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறான். இவன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்கிறது என்றால் இன்னும் இவனுடன் சிலர் சேர்ந்து பலர் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்? இவனை அழைத்து செவுளில் அறிந்தால் மற்றவர்கள் யாரும் இப்படியான வேலைகளை செய்ய பயப்படுவார்கள் தானே? இவர்களுக்கு தக்க தண்டனையை வழங்க நீதியை நிலைநாட்ட முடியாத நாமெல்லாம் குடிமகன்களா?
இந்த சிக்கலை எதிர்கொண்ட அந்த மாணவியின் இந்த பருவம் மனதில் கொள்ளப்பட வேண்டியது. அவருடைய வாழ்க்கையே திசை மாறி போய் விடும் அபாயம் இப்படியான சிக்கல்களால் உருவாகிறது. அவருக்கு எப்படியான பாதுகாப்பான சூழலை நாம் வழங்கி இருக்கிறோம்? பள்ளிகளைப் பொறுத்தவரை எவ்வளவு கட்டணங்களை வசூலிக்கிறார்கள்? ஒரு சின்ன தவறு நடந்தால் பெற்றோரை அழைத்து உடனடியாக விசாரிக்கிறார்கள்.. ஆனால் இவ்வளவு பெரிய தவறு நடக்கும் போது ஆசிரியரை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மட்டும் ஏன் இவ்வளவு தாமதம்? அதை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? தட்டிக் கேட்க முடியவில்லை? தடுத்துநிறுத்த முடியவில்லை? பின்னர் எதற்காக இப்படியான கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டும்? அந்த குழந்தைகளுக்கோ அவர்களின் பெற்றோருக்கோ எந்த மாதிரியான மனநிலை இருக்கும்? அவர்களுக்கு இந்த சமுதாயத்தை பார்க்கும்போது எந்த ஆண்மகன் மீதேனும் நம்பிக்கை வருமா?” என்று அவர் கேள்விக்கணைகளை அடுக்கியுள்ளார்.
மேலும் பேசியவர், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்? என்ன மாதிரியான வகுப்புகளை ஆன்லைனில் கற்கிறார்கள்? என்பதை எல்லாம் நாம் அருகில் இருந்து அவ்வப்போது கவனித்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் அனைத்தையும் நம் கண் பார்வைக்கு கொண்டு வரமாட்டார்கள். அவர்களால் எந்த அளவுக்கு நம் கண் பார்வைக்கு கொண்டு வர முடியுதோ அதையே நம் கவனத்துக்கு எடுத்து வருவார்கள். நாம்தான் மீதமுள்ளவற்றை கண்டுபிடித்து தெரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற இடத்தில் இருக்கும் ஒரு குரு இப்படியான வேலையைச் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அவருக்கு அதிகபட்சம் என்ன தண்டனையோ அந்த தண்டனையை அரசு வழங்க வேண்டும். கண்டிப்பாக வழங்கும். இதன் பிறகு குழந்தைகளை ஆசிரியர்கள் சரியாக கையாள வேண்டும். நம் சமுதாயத்தின் எதிர்காலமான குழந்தைகளுக்கு நம்மாள் கொடுக்க முடிந்தது ஒரு பாதுகாப்பான கல்விச் சூழலை மட்டும்தான். அதை கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உண்டானது. ஒரு பள்ளி நல்ல பள்ளி என்பதை தயவுசெய்து அந்த பள்ளியின் கட்டணத்தை கொண்டு முடிவு செய்யாதீர்கள். நீங்களே நேரடியாக சென்று அந்தப் பள்ளி பற்றி ஆய்வு செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அருண் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.