BiggBossTamil: திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான எம்.ஜி. வல்லபனின் பேத்தி ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் சென்னை வாணி மஹாலில் நடைபெற்றது.
நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரேகா..
இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா கலந்து கொண்டு ஆதிராவை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் பேசும்போது, “நான் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் உட்பட நிறைய நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கிறேன். ஒரு முழு நிகழ்ச்சியும் ஒரு நிமிடம் கூட கவனம் சிதறாமல் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தது இந்த ஆதிராவின் நடன நிகழ்ச்சியைத் தான்.
நீங்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தால் பார்க்க அழகாக இருக்காது. ஆனால் அவள் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை புன்னகை புரிந்து கொண்டே இந்த நடனத்தை ஆடினாள். கொஞ்சம் கூட அவளது ஆற்றலின் அளவு குறையவில்லை. அப்படிச் சிரித்துக்கொண்டே ஆடிய நடனம் அவ்வளவு அருமையாக இருந்தது. அதை நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். ஆதிராவின் பெற்றோர்கள் அவளை நன்றாக ஊக்கப் படுத்தி இருக்கிறார்கள். பெற்றவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பிள்ளைகளிடம் தாங்கள் இஷ்டப்பட்டதைத் திணிக்கக்கூடாது. பிள்ளைகளிடம் தானாகக் கற்றுக்கொள்ள விருப்பம் வரவேண்டும்” என்று கூறி வாழ்த்தினார்.
பிக்பாஸ் மூலம் ஸ்டார் ஆக முடியாது
மேலும் பிக்பாஸ் பற்றி பேசிய நடிகை ரேகா, “பிக்பாஸ் மூலம் ஒரு நூறு நாட்கள்தான் பிரபலமாக இருக்கமுடியும். பிக்பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது. ஆனால் வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம். அங்கே போன் கிடையாது, பேப்பர் கிடையாது, யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அந்த நிலையில் யாரும் பொறுமையாக இருந்து காண்பிக்க வேண்டும். நான் 15 நாட்களும் பொறுமையாக இருந்தேன். என் மீது நிறைய பேருக்குப் பொறாமை இருந்தது. எல்லாம் சாதித்துவிட்டு வந்திருக்கிறார்” என்று கூறினார்.
தூண்டிவிட்டு பரபரப்பை உருவாக்குவார்கள்..
தொடர்ந்து பேசியவர், “என் மகள் படித்து முடித்து விட்டு நியூயார்க்கில் இருந்தபோதும் நானும் கணவரும் தனியே இருந்தோம். சரி ஒரு பதினைந்து நாள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வரலாம் என்று நினைத்தேன். பிக்பாஸில் நடப்பது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு பதினைந்து நாள் போய்விட்டு வந்தேன். அது முடிந்தவுடன் குக் வித் கோமாளி போய்விட்டு வந்தேன்.
பிக்பாஸில் அந்த 100 நாட்களும் சூழல்களைத் தூண்டிவிட்டு ஒரு பரபரப்பை உருவாக்குவார்கள். உதாரணமாக, சனமாக இருக்கட்டும் வேறு யாராகவும் இருக்கட்டும்,‘நான் தான் சமைக்கிறேன் என்று சொன்னேனே’ என்று சண்டை போடுவது வரை பாருங்கள், அதுதான் மக்களுக்குப் பிடிக்கிறது. எனவேதான் சண்டைபோடும் சூழ்நிலைகளை உண்டாக்குகிறார்கள்.
அடிக்கடி சண்டைகள் நடக்கும், வெள்ளிக்கிழமை மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். சனி ஞாயிறு மாறிவிடுவார்கள். இப்படியே போய்க் கொண்டிருக்கும்.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
Also Read: "பிஞ்சிரும் ஜூலி .. என் செண்ட் பாட்டில Toilet-ல போடுற?".. "தூக்கி அடிச்சிருவேன்" - வனிதா