ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த ‘செம்பருத்தி’ சீரியலில் கதாநாயனாக நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ்.
‘செம்பருத்தி’ கார்த்திக் என்று புகழ் பெற்ற இவர், முன்னதாக ‘ஆபீஸ்’ எனும் பிரபலமான சீரியலில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜீ-5 ஓடிடியில் உருவான பிரபல வெப் தொடரிலும் நடித்திருந்தார். பின்னர் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில் கார்த்திக் தற்போது ஒரு புதிய வீடியோ ஒன்றை தமது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய அவர், “எல்லாருக்கும் வணக்கம். இந்த வீடியோவில் என்னுடைய அடுத்த ப்ராஜக்ட் பற்றிய விபரங்களை தான் நான் தெரிவிக்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் அது முடியவில்லை. ஏனென்றால் என்னை எந்த ப்ராஜக்ட்டும் பண்ண விடமாட்டேன் என்கிறார்கள். இங்கு நிறைய பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் பண்ண வேண்டிய ப்ராஜக்ட்கள் எல்லாவற்றிலும் உள்ளே புகுந்து, சில பின் வேலைகள் எல்லாம் செய்து நான் அவற்றை பண்ண முடியாதபடி பண்ணிவிட்டார்கள்.
நான் படம் பண்ண கூடாது என்று சில பேர் விரும்புகிறார்கள். இன்னும் மனம்திறந்து செல்ல வேண்டுமென்றால், ‘உன்னால் படம் பண்ண முடிந்தால் செய்து பார்’ என்று சவால் விடுகிறார்கள். கண்டிப்பாக ரசிகர்களாகிய உங்களுடைய உறுதுணையால் குவாலிட்டியான படங்களை என்னால் பண்ண முடியும். அந்த நம்பிக்கையில் K Studios என்று ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன்.
என்னுடைய அடுத்த ப்ராஜக்டை இதில் தான் பண்ண போகிறேன். நான் ஒரு பெரிய முதலீடு செய்வதற்கு என்னிடம் பெரிய பின்னணி இல்லை. ஆனால் என் வாழ்க்கையில் இதுவரை எல்லாம் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது நீங்கள்தான். இதுவரை உங்களிடம் நான் எதுவும் கேட்டதில்லை. முதல்முறையாக ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் கேட்கிறேன். சின்னதோ பெரியதோ உங்களால் என்ன முடியுமோ அதை பங்களிப்பாக தாருங்கள். உங்களால் மட்டும் தான் இதை சாத்தியப்படுத்த முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வீடியோவில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விபரங்களை காண்பிக்கிறார். அதில் ஒரு பார்கோடிங் இருக்கிறது. பார்கோடிங்கை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம், ஆனால் ஒரு முறைக்கு இரண்டு முறை க்ராஸ் செக் செய்து கொண்டு செலுத்தவும் என்று கார்த்திக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரசிகர்கள் முன்னிலையில் இந்த ப்ராஜக்டை தொடங்குவதாக குறிப்பிடும் கார்த்திக், இது தொடர்பான அப்டேட்களுடன் விரைவில் சந்திப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.