பிரபல முன்னணி இயக்குநரும், நடிகர் தனுஷின் சகோதரருமானவர் செல்வராகவன்.
‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் செல்வராகவன். அவரது இயக்கத்தில் கடைசியாக SJ சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.
இந்த படத்தை தொடர்ந்து ‘நானே வருவன்’, ‘ஆயிரதில் ஒருவன்-2’ உள்ளிட்ட படங்களை செல்வராகவன் இயக்கவுள்ளார். இதேபோல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘சாணி காயிதம்’ படத்தில் அறிமுக நடிகராக கீர்த்தி சுரேஷூடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிக்கிறார்.
இந்நிலையில் செல்வராகவனின் உதவி இயக்குநர் லதா என்பவரது இயக்கத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்கிற தகவலை நமது நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே செல்வராகவனிடம் திரைப்பட உருவாக்கம் கற்றவரும் அவரது மனைவியுமான கீதாஞ்சலி செல்வராகவன், ‘மாலை நேரத்து மயக்கம்’ எனும் திரைப்படத்தினை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராகன யோகிபாபு ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்ற பல முன்னணி மாஸ் ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அண்மையில் ‘மண்டேலா’ படத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருந்தார்.
தற்போது சமுத்திரகனி நடிப்பில் வெளியாகியுள்ள ‘வெள்ளை யானை’ திரைப்படத்திலும் முக்கிய நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: விவசாயிகளின் வலிகளை சுமந்து நடக்கிறது ‘வெள்ளை யானை’ - திரைப்பட விமர்சனம்.