இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள போஸ்ட் ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை இயக்கி ஹிட் இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன், கடைசியாக தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கிய செல்வராகவன், தற்போது மோகன்.ஜி இயக்கத்திலான பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக பீஸ்ட், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் செல்வராகவன் நடித்திருந்தார். இதில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.
அண்மையில் வெளியான பகாசுரன் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் மோகன் ஜி, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் "பகாசூரன்" படத்தை இயக்கி இருந்தார்.
இதனிடையே சமீப காலமாக இயக்குநர் செல்வராகவன் சில வாழ்வியல் அனுபவங்களை பதிவுகளாக சோசியல் மீடியா பக்கங்களில் எழுதி வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்களுக்கு மத்தியில் அவ்வப்போது வைரலாகவும் செய்யும். அந்த வகையில் முன்னதாக செல்வராகவன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை எழுதியிருந்தார்.
அவற்றுள், "வெறுப்பு என்பது மிக மோசமான உணர்வு ! அது உங்களைத்தான் அதிகம் காயப்படுத்தும். மனதிற்கும் சேதம் விளைவிக்கும். வாழ்க்கையில் பார்க்க எவ்வளவோ இருக்கின்றது. வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள்", "பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம்!! அனுபவம். தத்துவம் அல்ல", “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.” ஆகிய பதிவுகள் வைரலாகின.
இந்நிலையில், “அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ ! நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது ! அது வாழ்க்கையில் ஒரு முறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை ❤️” என்று இயக்குநர், நடிகர் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார். இதற்கு பதில் அளித்திருந்த இயக்குநர் சீனு ராமசாமி, “காதலை மனம் திறந்து சொன்னால் ஒரு காதல் பரிசாக உண்டு அதற்கு வாழ்த்துகிறேன். இக்கருத்தை சிலாகித்தேன் செல்வா சார்.” என ட்வீட்டில் பதில் அளித்துள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமி, கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, தற்போது ‘மெஹந்தி சர்க்கஸ்’ பட நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கி வருகிறார்.