பரத், சந்தியா ஆகியோரை வைத்து இயக்கிய 'கூடல் நகர்' என்னும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் சீனு ராமசாமி.
இதனைத் தொடர்ந்து, அவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம், தேசிய விருதுகளை வென்று குவித்திருந்தது.
இதன் பின்னர், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களையும் சீனு ராமசாமி இயக்கி உள்ளார். அடுத்தபடியாக, ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் 'இடிமுழக்கம்' என்ற திரைப்படத்தையும் சீனு ராமசாமி இயக்கி வருகிறார்.
இதற்கு முன்பு, சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த 'மாமனிதன்' திரைப்படம், சில விருதுகள் மற்றும் சர்வதேச அரங்கத்தில் அதிக கவனம் ஈர்க்கவும் செய்திருந்தது. அப்படி ஒரு சூழலில், தற்போது இயக்குனர் சீனு ராமசாமி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று, சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
ஒரு திரைப்படம் கவனம் பெறுவதற்கு என்னென்ன விஷயங்கள் நடக்க வேண்டும் என்பது பற்றி தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள இயக்குனர் சீனு ராமசாமி, ஒரு திரைப்படம் அதிக கவனம் பெறுவது தொடர்பாக ஏராளமான விஷயங்களை பதிவிட்டுள்ளார். ஒரு திரைப்படம் கவனம் பெற முதலில் மழை பெய்யவே கூடாது என்றும் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் மைதானம் காலியாக இருக்க வேண்டும் என்றும் மாநிலத்தின் நிலவரம் கலவரம் தவிர்த்திருத்தல் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ள சீனு ராமசாமி, போஸ்டர்கள் முதல் நாள் இரவு ஒட்டி இருத்தல் அவசியமானது ஒன்று என்றும் ஊடகம், பத்திரிக்கை நண்பர்களின் அன்பும் தொலைக்காட்சிகளில் ஒரு பாடலாவது ஈர்க்க வேண்டும் என்றும், ஒரு படம் கவனம் பெற பெரிய நடிகர்கள் கொண்டு விளம்பரம் செய்வது சிறந்தது என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.
அதேபோல, இதன் அடிப்படை விதி பற்றி குறிப்பிட்டுள்ள சீனு ராமசாமி, "படம் கவனம் பெற முதலில் படம் நேர்த்தியாக ரசிகர்களை கவரும்படி இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை விதி" என்றும் தெரிவித்துள்ளார். படம் தியேட்டருக்குள் வருவதற்குள் வெற்றி விழா அவசரம் தவிர்த்தல் வேண்டும் என அறிவுறுத்தும் சீனு ராமசாமி, சிறிய படங்கள் மற்றும் பெரிய படங்கள் ரிலீஸ் ஆவது குறித்தும் சில கருத்துக்களை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல பல அறிவுறுத்தல்களை தனது பதிவில் குறிப்பிட்டுள்ள சீனு ராமசாமி கடைசியில், "ஒரு படம் கவனம் பெற்றாலும் காலத்தால் வாழும் தன்மை படத்தில் இருந்தால் முதல் மூன்று நாட்கள் தியேட்டர் விதி மீறி மக்களிடம் வாழும் தன்மை பெறும் படைப்பாகும். படம் கவனம் பெற படமே பிரதானமாகும்" என்றும் பகிர்ந்துள்ளார்.