திரைத்துறையில் தொடரும் கலைஞர்களின் மரணம் திரையுலகினரிடத்திலும் சரி, ரசிகர்களிடத்திலும் சரி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், கே.வி.ஆனந்த், மாநகரக் காவல் இயக்குநர் தியாகராஜன் என பலரும் உயிரிழந்தனர். இதேபோல் பாடகர்கள் எஸ்.பி.பி, டி.கே.எஸ். நடராஜன், ஆட்டோகிராஃப் கோமன் , அண்மையில் பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்டோரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நடிகர்களை பொறுத்தவரை, விவேக், நெல்லை சிவா, பாண்டு, ‘கில்லி’ மாறன், ‘அசுரன்’ நிதிஷ் வீரா உள்ளிட்டோரின் மறைவு திரைத்துறையை மீளா சோகத்தில் ஆழ்த்தியது. அண்மையில் நடன இயக்குநர் மற்றும் நடிகர் சிவசங்கர் மாஸ்டரின் மறைவு தென்னிந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இயக்குநர் ஆச்சார்யா ரவி மரணம் அடைந்திருக்கும் தகவல் வெளியாகி திரைத்துறையினரிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இயக்குநர் ஆச்சார்யா ரவி, விஜய் நடித்த ஷாஜாகான் திரைப்படத்தை இயக்கியவர் என பேசப்பட்டு வந்தது.
ஆனால் உண்மையில் இயக்குநர் ஆச்சார்யா ரவி, ‘ஆச்சார்யா’ எனும் திரைப்படத்தை இயக்கியவர். இந்த படத்தில் விக்னேஷ், திவ்யா, நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கியதால் இயக்குநர் ரவி, ஆச்சார்யா ரவி என அழைக்கப்பட்டார். இவர் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
இந்நிலையில் இயக்குநர் ஆச்சார்யா ரவி குறித்து தமது ட்விட்டரில் இயக்குநர் சீனு ராமசாமி உருக்கமாக ட்வீட் பதிவிடுள்ளார். அந்த ட்வீட்டில், “படைப்பாளிகள் நம் சிந்தையிலும் இதயத்திலும் என்றும் வாழ்வார்கள்! சாந்தி அடையுங்கள் ரவி அண்ணன்.
Creaters alive in our hearts and minds always.
RIP #AcharyaRavi Annan
my deep condolences to his family and friends.#Baladirector @SeemanOfficial pic.twitter.com/dOgT1PsXcb
— R.Seenu Ramasamy (@seenuramasamy) December 28, 2021
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்று அவர் பதிவிட்டு இயக்குநர்கள் பாலா மற்றும் இயக்குநர், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரை tag செய்துள்ளார்.