விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக வெற்றிமாறன் இயக்கி உள்ளார்.
தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும், ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக் கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
இந்த படத்தினை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குனர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது வெற்றிமாறன் காட்டுவார் என்றே எதிர்பார்ப்பு உள்ளது. வெற்றி மாறனை நம்ப முடியாது. ஏற்கனவே வட சென்னை- 2 என சொல்லிட்டு வேற படத்துக்கு போயிட்டார். இதுல காட்டுப்பா. இல்லேன்னா உன்னை நம்ப மாட்டாங்கனு சொன்னதால் இரண்டாம் பாகம் காட்சிகளை முதல் பாகத்தில் சேர்த்து இருக்கார். ஏற்கனவே எடுத்து இருக்கேன் என தெரியப்படுத்தி உள்ளார்" என சீமான் பேசியுள்ளார்.