மக்கள் திலகம் என மக்களால் போற்றப்பட்டு வரும் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சத்யராஜ் அவரது வசனம் பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்க கூடிய வகையில் சிறந்த நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி. ஆர். நீண்ட ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த அவர், மக்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படங்கள் காலம் தாண்டியும் நிலைத்து நிற்கக் கூடியவை ஆகும்.
அதே போல, எம்ஜிஆர் பேசும் வசனங்களும் பெரிய அளவில் மக்கள் மனதை கவரும் வகையில் அமைந்திருந்தது. சினிமாவில் இருந்து மெல்ல அரசியல் பக்கம் வந்த எம்ஜிஆர், தமிழக முதல் அமைச்சராகவும் இருந்துள்ளார். சினிமாவில் மட்டும் மக்களுக்காக நிற்பதில்லை என்பதைத் தாண்டி அரசியலிலும் மக்களுக்காக சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்த எம்ஜிஆர், நிறைய திட்டங்களையும் மக்களுக்காக செயல்படுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி எம்ஜிஆர் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் கடுமையாக உலுக்கி இருந்தது. ஆண்டுகள் கடந்து இன்னும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய சக்தியாக எம்ஜிஆர் திகழும் நிலையில், இன்று (ஜனவரி 17) அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருந்தது.
எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பிரபல வசனங்கள் சிலவற்றை அசத்தலாக பேசி வீடியோ ஒன்று நடிகர் சத்யராஜ் சார்பில் வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோவை பிரபல நடிகை ராதாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு எம்ஜிஆர் குறித்து சில உருக்கமான கருத்துகளையும் அதில் பகிர்ந்துள்ளார்.