சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”.
இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா‘ மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் உதயநிதி ஸ்டாலின் குறித்து நிறையவே பேசினார். இப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் தமது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் கீழ் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
இந்நிலையில் உதயநிதி குறித்து பேசிய சந்தானம், “இந்த படத்தை வெளியிட பெரும் உதவியாய் இருந்தார். ஆனால் இப்போதுதான் புரிகிறது, அவர் சினிமாவில் பேசுவதற்காக வரவில்லை” என்று கலகலப்பாக பேசியிருந்தார். அப்போது, “ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஒரு சீன் ஹன்சிகாவிடம் காதலை சொல்லும் சீன். அதில் சந்தானமே காமெடியாக சொல்லட்டும் என்று சொல்லிவிட்டார். நீங்க தாங்க ஹீரோ.. நான் எப்படிங்க லவ் சொல்றது என கேட்டேன்.
நான் சொன்னால் சீரியஸாக இருக்கட்டும் என்று உதய் சொல்லிவிட்டார். நானும் ராஜேஷ் சாரும் யோசித்தோம். பிறகு நண்பேண்டா, இது கதிர்வேலன் காதல் என எல்லா படத்திலும் பெரும்பாலும் என்னை பேசவிடுவார். அவர் அளவாகவே பேசுவார். அதிக டயலாக் பேசமாட்டார். அதன் பின்னர் எலக்ஷனுக்கு முன்பாக அவர் பிரச்சாரத்தில் பேசும்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரியவந்தது. அவர் சினிமாவில் வசனம் பேச வரவில்லை. மக்களிடம் நேரடியாக தான் பேச வந்திருக்கிறார்” என கூறினார்.
மேலும் குளு குளு படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டி.வி-யும், ஓடிடி உரிமத்தை சன் நெக்ஸ்ட்டும் கைப்பற்றியுள்ளன. அண்மையில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்த உதயநிதி, அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘கலகத் தலைவன்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.