புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட படபிடிப்பிற்கான வரியை குறைக்க கோரி மாநில முதல்வர் ரங்கசாமியை நடிகர் சந்தானம் வலியுறுத்தினார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சந்தானம். முதலில் காமெடி நடிகராக அறிமுகமாகி, பின்னர் காமெடி ஜானர் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் ஆக்ஷன், காமெடி, ரொமாண்டிக் என ஜனரஞ்சகமாக தமது திரைப்படங்களை வழங்கி வருகிறார். இவற்றுடன் நடிகர் சந்தானத்தின் காமெடியும் கலாய்ப்பும் கலந்து 2 பாகங்களாக வெளியான ஹாரர் படங்களான தில்லுக்கு துட்டு திரைப்படங்களும் ஹிட் அடித்தன.
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் அண்மையில் டிக்கிலோனா திரைப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியது. டைம் டிராவல் திரைப்படமான இந்த திரைப்படம் ஒரு ஃபிக்ஷன் படமாகவும், அப்படத்தின் காமெடி - கலாய் ஃபார்முலாவுக்காகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற டிரிபிள் ஆக்ட் முயற்சி மற்றும் இப்படத்தில் இடம் பெற்ற பேர் வெச்சாலும் என்கிற ரீமிக்ஸ் பாடல் ஆகியவை இப்படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தன.
இதனைத் தொடர்ந்து சந்தானம் நடித்த சபாபதி திரைப்படமும் நேரடியாக திரையரங்குகளில் வெளியானது, திக்கிப் பேசுவதால் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளை கண்டு துவண்டு போகும் ஒரு வாலிபரின் வாழ்வில் நடக்கும் திடீர் சர்பரைஸ் திருப்பத்தை மையமாகக் கொண்டு சபாபதி திரைப்படத்தின் கதையமைப்பு உருவாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து நடிகர் சந்தானம், தமது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இதனிடையே புதுச்சேரியை மையமாக வைத்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்துக்காக 40 நாட்கள் புதுச்சேரியில் முழுக்க முழுக்க படபிடிப்பு நடைபெற உள்ளது. மேலும் இத்திரைப்படத்திற்கான பூஜை ஸ்ரீ கொளசிக பாலசுப்பிரமணியம் முருகன் கோவிலில் நடைபெற்றது.
இந்நிலையில் நடிகர் சந்தானம் புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள படபிடிப்பிற்கான கட்டணத்தை குறைக்கவும், சுற்றுலாத்தலங்களில் படபிடிப்பிற்கான அனுமதியை எளிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.