கோவையில் பத்தல பத்தல பாடலுக்கு பள்ளி மாணவ,மாணவிகளுடன் ஆடி அசத்தியுள்ளார் நடன இயக்குனர் சாண்டி.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி அண்மையில் பெருவெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் வெளியிட்டது.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மரண மாஸ் குத்துப்பாடல் ‘பத்தல பத்தல’. நீண்ட வருடங்களுக்கு பின் கமல்ஹாசன் குரலில் அவரே நடனமாடியுள்ள இந்த பாடலில் பாடல் வரிகள், கமலின் நடன ஸ்டெப் என அனைத்துமே வைரலாகின. குறிப்பாக அண்ணாத்த ஆடுறார், காசுமேலே காசுவந்து, ஆழ்வார்பேட்ட ஆண்டவா போன்ற கமல்ஹாசனின் ஹிட் அடித்த மெட்ராஸ் கானா பாடல்களின் வரிசையில் பத்தல பத்தல செம ட்ரெண்டிங் ஆனது.
இந்நிலையில்தான், கோயமுத்தூர் சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் கூட்டமைப்பின் 43வது ஆண்டு பள்ளிகளுக்கான நடன போட்டிகள் கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள பெங்க்லன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில்,சிறப்பு விருந்தினராக பிரபல நடன இயக்குனர் சாண்டி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் நடனமாடி மகிழ்ந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர், சமூக வலைதளங்கள் நல்ல அப்டேட்டாக இருப்பதால் கலை திறமைகள் இருக்கும் யார் வேண்டுமானாலும் எளிதாக தங்களது திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வர முடிவதாக கூறினார். தற்போது நடன கலையை அனைத்து தரப்பினரும் ஊக்குவிப்பதாக கூறிய அவர், பள்ளிகளில் இதற்கு தனியாக வகுப்புகள் நடப்பதை சுட்டி காட்டினார்.
மேலும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான இவர், பிக்பாஸ் தொடரில் பங்கேற்ற பிறகு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்ததாக குறிப்பிட்டதுடன், விக்ரம் படத்திற்கு மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் தற்போது வருவதாக குறிப்பிட்டுள்ளார்.