சமுத்திரகனி நடிக்கும் 'வெள்ளை யானை' திரைப்படத்தின் நேரடி ஒளிபரப்புத் தேதியை அறிவித்துள்ளது சன் டி.வி நிறுவனம்.
தனுஷ் நடிப்பில் ‘திருடா திருடி’,‘சீடன்’ திரைப்படங்களை இயக்கியவரும், தனுஷ் ரசிகர் மன்றத் தலைவருமான இயக்குநர் சுப்பிரமணிய சிவா, அடுத்து இயக்கியுள்ள படம் 'வெள்ளை யானை'.
மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இந்த படம் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. கொரோனா அச்சுறுத்தலால், திரையரங்குகள் செயல்படாமல் இருப்பதால், இந்தப் படம் ரிலீஸ் ஆவது தள்ளிப் போய் வந்தது.
பின்னர் இந்த திரைப்படம், டிஜிட்டல் வெளியீட்டுக்கு தயாராவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இறுதியாக இப்படத்தின் நேரடி தொலைக்காட்சி வெளியீட்டு உரிமத்தை சன் டி.வி. கைப்பற்றியதாக கடந்த மாதங்களில் தெரியவந்தது.
இந்நிலையில், 'வெள்ளை யானை' திரைப்படம், ஜூலை 11-ம் தேதி மதியம் 3 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் என்று ட்ரெய்லருடன் அறிவித்துள்ளது சன் டி.வி.
அனுபவம் எல்லாவற்றையும் புரியவைக்கும்..
திரைக்கு வருவதற்கு முன்பே,
நேரடியாக தொலைக்காட்சியில்...
வெள்ளை யானை | ஜூலை 11 | 3 PM#SunTV #VellaiYaanai #VellaiYaanaiOnSunTV #WorldTelevisionPremiere #SubramaniamShiva @thondankani @iYogiBabu #Athmiya pic.twitter.com/EfYEas7zv9
— Sun TV (@SunTV) July 5, 2021
சமுத்திரக்கனியுடன், ஆத்மியா, யோகி பாபு, சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதே பாணியில் 'ஏலே' மற்றும் 'மண்டேலா' ஆகிய திரைப்படங்கள் விஜய் தொலைக்காட்சியிலும், கதிர் நடித்த ‘சர்பத்’ திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும், நேரடியாக ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.