நடிகை சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்திருந்தார். பேமிலி மேன் வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.
சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா தாங்கள் இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர்.
திருமண முறிவுக்கு பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம், தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ மற்றும் 'யசோதா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் "ஓ சொல்றியா மாமா" பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.
நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மற்ற Cast & Crew விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு பெண்ணாக, நியாயந்தீர்க்கப்படுவது என்றால் என்ன என்பதை நான் நேரடியாக அறிந்திருக்கிறேன். பெண்களின் உடை, அவர்களின் இனம், கல்வி, சமூக அந்தஸ்து, தோற்றம், தோலின் நிறம் மற்றும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஒரு நபர் அணியும் ஆடைகளை அடிப்படையாகக் கொண்டு அவரைப் பற்றி உடனடித் தீர்ப்புகளை வழங்குவது உண்மையில் ஒருவரால் செய்யக்கூடிய எளிதான காரியமாகும்.
இப்போது நாம் 2022 ஆம் ஆண்டில் இருக்கிறோம்- ஒரு பெண்ணை அவள் அலங்கரிக்கும் ஹெம்லைன்கள் மற்றும் நெக்லைன்களின் அடிப்படையில் மதிப்பிடுவதை நிறுத்திவிட்டு நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாமா?அந்தத் தீர்ப்பை உள்நோக்கித் திருப்பி, சுயமாகப் பயிற்றுவிப்பதுதான் பரிணாமம்! நம் இலட்சியத்தை வேறொருவர் மீது முன்வைப்பது யாருக்கும் எந்த நன்மையையும் செய்யாது... ஒரு நபரை நாம் அளவிடும் மற்றும் புரிந்துகொள்ளும் விதத்தை மெதுவாக மீண்டும் மாற்றி எழுதுவோம்!" என சமந்தா கூறியுள்ளார்.