மலையாள திரைப்படங்களில் தனது திரை வாழ்வை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான்.
துல்கர் சல்மானின் நடிப்பில் கடைசியாக குருப் படம் கடந்த நவம்பர் 12 அன்று வெளியானது. ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியான 'குருப்'. உலகளவில் 75 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை புரிந்தது. முதல் வாரத்தில் மட்டும் 43.35 கோடி ரூபாய் வசூல் செய்தது. இது துல்கர் சல்மானின் முந்தைய படங்களின் வசூலை விட அதிகமாகும். இதன் மூலம் துல்கர் சல்மான் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படமாக குரூப் உருவெடுத்தது. இதையடுத்து பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் லெப்டினன்ட் ராம் எனும் ராணுவ வீரர் வேடத்தில் நடிக்கிறார், இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார் . கீர்த்தி சுரேஷின் 'மகாநதி' படத்தில் ஜெமினி கணேசனாக நடித்த பிறகு தெலுங்கில் துல்கரின் இரண்டாவது படம் இதுவாகும். மிருனாள் தாகூர் ஜோடியாக நடிக்கிறார். ஓதிரம் கடக்கம், கிங் ஆப் கோத்தா போன்ற படங்களின் முதல் லுக் போஸ்டரும் ஏற்கனவே வெளிவந்துள்ளன.
இது போக போலிசாக நடித்த மலையாள ஆக்ஷன் த்ரில்லர் 'சல்யூட்' மற்றும் தமிழ் படமான 'ஹே சினாமிகா' ஆகியவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 'ஹே சினாமிகா' படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார். துல்கருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கின்றனர். இந்த படம் 2022 பிப்ரவரி 25 அன்று வெளியாக உள்ளது என நேற்று முதல் லுக் போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை ஜோதிகாவை வைத்து 36 வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூ இயக்கத்தில் துல்கர் சல்மான் போலிசாக நடித்த மலையாள ஆக்ஷன் த்ரில்லர் 'சல்யூட்' படம் வரும் பொங்கலுக்கு 2022 ஜனவரி 14 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள வலிமை, பிரபாஸின் ராதே ஷ்யாம், RRR போன்ற படங்களுடன் மோத உள்ளது.