சிரஞ்சீவி & சல்மான் கான் நடிக்கும் 'காட்பாதர்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் நடிகர் பிரித்வி ராஜ் இயக்கத்தில் வெளியான அரசியல் த்ரில்லர் படம் 'லூசிஃபர்'. இந்த படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் இயக்குனரான பிரித்வி ராஜ் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார்.
இந்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க, தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்னும் பெயரில் தயாராகி உள்ளது. பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகி இருக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான் ஆகிய இரண்டு மெகாஸ்டார்களுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சத்யதேவ், சுனில், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுரேஷ் செல்வராஜன் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
'காட்ஃபாதர்' திரைப்படத்தை கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆகிய முன்னணி பட நிறுவனங்களின் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர். பி. சவுத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை கொனிடேலா சுரேகா வழங்குகிறார்.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அக்டோபர் ஐந்தாம் தேதி தசரா திருவிழாவின்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ஆக்சன் மற்றும் மாஸ் காட்சிகளுடன் மலையாளத்தில் இல்லாத சில காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன.
மலையாளத்தில் பிரபலமான மோகன்லால் போலீசை தாக்கும் காட்சி தெலுங்கிலும் இடம் பெற்றுள்ளது. டீஸரில் நயன்தாரா, சத்யதேவ், சுனில் ஆகியோரும் தோன்றியுள்ளனர். சல்மான் கான் & சிரஞ்சீவி இணைந்து செய்யும் துப்பாக்கி சண்டைக்காட்சிகள் மற்றும் அரசியல் வசனங்கள் டிரெய்லரில் முக்கிய அம்சமாக உள்ளன.