மலையாளத்தில் நடிகர் பிரித்வி ராஜ் இயக்கத்தில் வெளியான அரசியல் த்ரில்லர் படம் 'லூசிஃபர்'. இந்த படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் இயக்குனரான பிரித்வி ராஜ் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார்.
இந்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க, தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்னும் பெயரில் தயாராகி உள்ளது. பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகி இருக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான் ஆகிய இரண்டு மெகாஸ்டார்களுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சத்யதேவ், சுனில், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுரேஷ் செல்வராஜன் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
'காட்ஃபாதர்' திரைப்படத்தை கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆகிய முன்னணி பட நிறுவனங்களின் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர். பி. சவுத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை கொனிடேலா சுரேகா வழங்குகிறார். இந்த திரைப்படம் அக்டோபர் 5-ஆம் தேதி தசரா திருவிழாவின்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 16-ஐ தொகுத்து வழங்கிய நடிகர் சல்மான் கான், “ஆயிரம் கோடி ரூபாய் எல்லாம் நான் சம்பளமாக வாங்கினால் வாழ்க்கையில் அதன் பிறகு சம்பாதிக்கவே வேண்டாம். ஆயிரம் கோடி சம்பளம் என்று வதந்தி பரவியதால் எனக்கு கிடைக்காத அந்த பணத்தை சேனலுக்கே கொடுத்து விடலாம் என்று கருதுகிறேன். அப்படி செய்தால் டிவி சேனல் பயனடையும். அத்துடன் இந்த அளவுக்கு சம்பளம் வாங்கினால் வழக்கறிஞர் கட்டணம் உட்பட பல்வேறு வகை செலவுகள் செய்ய வேண்டியதிருக்கும். இந்த செய்தி வருமானத் துறைக்கு கிடைத்து அவர்கள் நோட்டீஸ் அனுப்பினால் உண்மை வெளியே வரும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மும்பையில் நடந்த காட் ஃபாதர் பட விழாவில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, நடிகர் சல்மான் கான் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துக் கொடுக்க பணம் எதுவும் பெறவில்லை என்றும், நடிகர் சல்மான் கானுக்கு இப்படத்தின் தயாரிப்பாளார்கள் பணம் கொடுக்க போனபோது ‘கெட் லாஸ்ட்(வேண்டாம் போயிடுங்க)’ என்று சொல்லிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.