ஐதராபாத்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு சாய்னாவின் தந்தை சித்தார்த்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஜனவரி 5 அன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூருக்கு பிரதமர் மோடி சென்ற போது போராட்டக்காரர்கள் பிரதமர் மோடி செல்லும் வழியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஞ்சாப் சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இதனால் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் பாஜக ஆதரவு தளத்தில் இருந்து குவிந்தன.
பிரதமர் மோடிக்கு ஆதரவாக We Stand With Modi எனும் டிவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த டிவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்டில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் கலந்து கொண்டார். அதில் ''ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது, பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டிக்கிறேன்''. என பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
சாய்னா நேவாலின் ட்வீட்டிற்கு பதில் கருத்தாக நடிகர் சித்தார்த், சாய்னா நேவாலின் பேட்மிட்டன் (இறகு பந்து) விளையாட்டினை இணைத்து இழிவுபடுத்தும் வகையில் (06.01.2022) அன்று பதிலளித்திருந்தார். இந்த டிவீட்டிற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் வந்தன. சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யவும் தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிர காவல்துறை டி ஜி பி க்கு கடிதம் அனுப்பியது. இதைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த் மீண்டும் (10.01.2022) அன்று "தான் கூறிய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக" டிவீட் செய்து இருந்தார்.
இந்நிலையில் சித்தார்த்தின் டிவீட்டிற்கு சாய்னாவின் தந்தை ஹர்வீர் சிங் நேவால் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ""என் மகள் நாட்டுக்கு பதக்கங்கள் பெற்று தந்தார்! நீங்க என்ன செய்தீங்க சித்தார்த்.?" என கேள்வி எழுப்பியுள்ளார், மேலும் "என் மகளுக்கு சித்தார்த் அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியபோது நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். இந்தியா ஒரு சிறந்த சமூகம் என்று நான் எப்போதும் நம்புகிறேன், பத்திரிகையாளர்கள் மற்றும் விளையாட்டு துறை சகோதரத்துவத்தின் ஆதரவு சாய்னாவுக்கு எப்போதும் உள்ளது. மன்னிப்பு கேட்பதுதான் சித்தார்த் செய்ய வேண்டிய அடிப்படை செயல்". என கூறியுள்ளார்.