'மெட்டி ஒலி' சீரியலில் விஜி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஷ்வரி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு அவருடன் நடித்த சக நடிகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். குறிப்பாக மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர் சேத்தன் மற்றும் காயத்ரி சாஸ்திரி (சரோ), வனஜா (லீலா) ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நடிகர்கள் லதா, ஜீவா, ரேவதி, ரிஷி பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து பேசிய நடிகர் சாய் கார்த்திக், “உமாவின் மறைவை fake news-னு நெனைச்சேன். ஆனால் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் இருந்து இந்த செய்தி வந்ததும் தான் நம்பினேன். மிகவும் உடைந்து போய் விட்டேன். கவலையாக இருக்கிறது. வாழ வேண்டிய வயது. அவருக்கு சாக வேண்டிய வயது அல்ல. நாற்பது வயது என்பது வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய வயது. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவர் மிகவும் நல்ல கேரக்டர். தங்கமானவர். எல்லாரிடமும் அன்பாக பாசமாக பேசுவார். உதவி செய்யக்கூடிய மனப்பான்மை உடையவர். அனைவரும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய பாசிட்டிவான ஒருவர். அவருக்கு வந்த இப்படி ஒரு நிலைமையை ஏற்க முடியவில்லை.
அவர் அறிமுகமானதிலிருந்து அவருக்கும் எனக்கும் ஒரு அக்கா தம்பி உறவு இருந்து வந்தது. நிறைய அறிவுரைகள் கூறுவார். அவருடைய பிரிவு என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மன வலியைத் தருகிறது. மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார். உமா மகேஷ்வரி, மஞ்சள் காமாலையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவருடைய உறவினர் மூலமாக தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.