நடிகை சாய் பல்லவி, தான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டதாலும், அது சர்ச்சையானதாலும் மிகவும் மன உளைச்சலாக இருந்ததாக குறிப்பிட்டு வீடியோ ஒன்றை விளக்கத்துடன் வெளியிட்டுள்ளார்.
இத்துடன், இந்த நேரத்தில் தான் தனி ஆள் இல்லை, தனக்கு ஆதரவாக நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை உணரவைத்த அனைவருக்கும் நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார். நடிகை சாய் பல்லவி நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் விராட பருவம் என்கிற திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் புரமோஷன் விழாவின்போது நடிகை சாய் பல்லவி சொன்ன கருத்து சர்ச்சையானது.
அதில், “காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவது, மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட பின்பு ஜெய் ஸ்ரீராம் என சொல்லச்சொல்லி தாக்குதல் நடத்தியது உள்ளிட்டவற்றை அனைத்தும் ஒன்றுதான். மதத்தின் பேரால் மனித உயிர்கள் போகக் கூடாது, துன்புறுத்தப்படக் கூடாது” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், தான் சொன்ன கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டதாக கூறி நேரலையில் விளக்கம் அளித்திருக்கும் சாய் பல்லவி, “நான் இடதுசாரியோ, வலதுசாரியோ இல்லை, நடுநிலையே எனது நிலை. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. மதம், மொழி, இனம், ஜாதி உள்ளிட்ட வேறுபாட்டுக்காக உயிரிகள் பறிக்கப்படவோ, துன்புறுத்தப்படவோ கூடாது என்பதையே சொன்னேன். அது தவறாக சித்தரிக்கப்பட்டு, அது சர்ச்சையானது மிகவும் வேதனையாக உள்ளது.” என பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசியவர், “எனது 14 ஆண்டு கால பள்ளி பருவத்தில் இந்தியர்கள் அனைவரும் சமம். அனைவரும் என் சகோதர சகோதரிகள். நான் என் நாட்டை உளமாற நேசிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்துருக்கிறேன். சாதி, மதம், இனம் ரீதியாக யாரையும் வேறுபடுத்தி பார்த்ததில்லை. நடுநிலையாகவே பேசுபவள் நான். இனி என் இதயத்தில் இருந்து ஒரு கருத்தை பேசும் முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பேன். நன்றி” என்று கூறியுள்ளார்.