கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினிகாந்த் முக்கிய கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்து புதிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் மும்பையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து சடகோபன் ரமேஷ், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒப்பற்ற தலைவர். வெள்ளைச் சட்டையில், ஒளிரும் புன்னகையுடன் நடந்து செல்கிறார். என் மனம் ஸ்டைலு ஸ்டைலு தான்...இது சூப்பர் ஸ்டைலு தான்..பாடலை பாடுகிறது.
மும்பையில் ஒரே தலைவரான ரஜினி சாரை சந்திக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு இன்று காலை ஏற்பட்டது. என் உற்சாகத்திற்கு எல்லையே இல்லை, நான் அவரைப் பார்க்க விரைந்தேன். ஒப்பிடமுடியாத ஒரு அடக்கமான ஆளுமை, அவரது சூப்பர்ஸ்டார் நிலை மற்றும் பாணியை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தினேன். என் மனதில் ஆயிரம் படங்கள் ஓடின...எனக்கு எதிரே வந்த மனிதன்.. அண்ணாமலை, முத்து, தில்லு முல்லு, ஜானி, சூர்யா, பரட்டை, பாட்ஷா, காளி, கபாலி என... பட்டியல் முடிவற்றது. அவருடனான சில நிமிட உரையாடல் மற்றும் அவரது இருப்பு, ஆற்றல் மற்றும் ஆரா ஆகியவற்றால் நான் வியப்படைந்தேன். இந்த புகைப்படம் எல்லாவற்றையும் சொல்கிறது. ஒரு புத்திசாலித்தனமான மற்றும் மறக்க முடியாத சனிக்கிழமை காலை!!" என சடகோபன் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.