இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்கிற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்.
இவர் முன்னதாக விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில் சனியன் சகடை என்கிற கதாபாத்திரத்தில் பிரபலமானார். தொடர்ந்து சகுனி, கோ, ஏய், ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணசேத்திர நடிகராகவும் சில நேரங்களில் நகைச்சுவை செய்தும் நடித்து வந்தவர்.
தமிழ், தெலுங்கு என்று சுமார் 700 திரைப்படங்களுக்கு மேல் நடித்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ், பிரணாம் கரீது என்கிற படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணித்தை தொடங்கி பிரபலமானார். கடந்த 1990 ஆம் வருடம் பாஜகவில் இணைந்த இவர், 1999-ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆந்திராவின் கிழக்கு விஜயவாடா தொகுதியில் போட்டியிட்டு பதவி வகிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கோட்டா சீனிவாச ராவ், தெலுங்கு சினிமா மூத்த நடிகர். இவருக்கு தற்போது 75 வயதான நிலையில், இவர் குறித்த தவறான தகவல்கள் வலம் வந்தன. அதன்படி இவர் மறைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளும் பரவி வந்த நிலையில், தற்போது அவற்றுக்கு மறுப்பு தெரிவித்து வீடியோ பதிவிட்டு இருக்கிறார். குறிப்பிட்ட இந்த வீடியோவில் பேசியிருக்கும் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் சமூக வலைதளங்கள் தன்னை கொன்றுவிட்டதாகவும் மக்கள் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அத்துடன் இதுபோன்ற வதந்திகளை பரப்புவோருக்கு தக்க பாடத்தை மக்கள்தான் கற்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டவர், தான் இறந்துவிட்டதாக வெளியாகி இருக்கிற செய்தி துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசியவர் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையை கொண்டாடுவதற்கான வேலையில், தான் ஈடுபட்டு இருப்பதாகவும் இது போன்ற சூழலில் இப்படியான வதந்திகள் பரவுவது தனக்கு வருத்தமாக இருப்பதாகவும், தன்னுடைய இடத்தில் வேறு எந்த முதியவரேனும் இருந்தால் அவருடைய இதயமே வெடித்திருக்கும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
Veteran actor #KotaSrinivasaRao gives clarity on the fake news circulated on his demise. He posted a video, saying..while he was busy with Ugadi preparations, he got atleast 50 calls. @NewsMeter_In @CoreenaSuares2 @KanizaGarari pic.twitter.com/0Wt5JKuKI3
— SriLakshmi Muttevi (@SriLakshmi_10) March 21, 2023
மேலும் பெயரையும் புகழும் ஈட்டுவதற்கு எக்கச்சக்கமான வழிகள் இருக்கும் பொழுது இது போன்ற வதந்திகளை பரப்பி அதற்கான வேலையை செய்ய வேண்டியது இல்லை என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.