பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் சமுத்தரகனி, சாக்ஷி அகர்வால், சரவணன், இனியா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் எஸ்ஏசி. இப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த நிலையில் Behindwoods தளத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், "நான் அடிப்படையில் சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து கமர்சியல் படம் எடுப்பவன். ஆனால் இடையில் விஜய்யை வைத்து ரொமான்டிக் திரைப்படங்கள் எடுத்தேன். அவரை ஒரு நடிகராக உருவாக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய பாணியை விட்டு விலகிவிட்டேன். எனக்கு ரொமான்டிக் படங்களும் தெரியாது. இருப்பினும் ரசிகன், தேவா, விஷ்ணு, சந்திரலேகா என பல படங்களில் விஜய்யை நடிகராக உருவாக்க வேண்டி இருந்தது.
அவரும் அந்த படங்களில் பணிபுரிந்து ப்ரொபஷனல் ஒழுக்கங்களுடன் தேர்ந்து, இப்போது பெரிய நடிகராக வளர்ந்து விட்டார். அப்படியே விஜயகாந்தை உருவாக்கினேன்.. அவர் பின்னால் மிகப்பெரிய அரசியல்வாதி ஆனார். அதுபோல விஜய்யை நடிகனாக உருவாக்கி இருக்கிறேன்.
அதைவிட எனக்கு வேறு விருது தேவையில்லை . எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய் என்பது போய் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லப்படுவதுதான் அத்தனை தேசிய விருதுக்கு சமம். அது தெரிந்தும், அதை எதிர்பார்த்தும்தான் இதை செய்தேன். ஏனென்றால் இயக்குனராக மட்டுமே அவரை உருவாக்கவில்லை, அவரை உருவாக்கும்போதே நான் தந்தையாகவும் இருந்திருக்கிறேன்” என்று நெகிழ்ந்து பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசும்போது,. “ஆனால் அதே சமயம் இடையில் என் பாணி திரைப்படத்தை விட்டு விலகிப் போய்விட்டேன். அதுதான் நான் செய்த தவறு. சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை உள்ளிட்ட என்னுடைய படங்கள் சோசியல் அட்டாக் வகையறா திரைப்படங்கள். அதுதான் என்னுடைய பாணி. தற்போது மீண்டும் அப்படியான திரைப்படங்களை எடுக்க தொடங்கி இருக்கிறேன். டிராபிக் ராமசாமி என்று திரைப்படம் நடித்தேன். ஆனால் அது போதுமான வருவாயை கொடுக்கவில்லை. இப்போதுதான் என் பாணி திரைப்படங்களை கையில் எடுத்திருக்கிறேன்.” என்று பேசினார்.