சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் மார்ச் 30-ஆம் தேதி, காலை சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்துக்கு டிக்கெட் வாங்கி சென்னை ரோகிணி தியேட்டருக்கு திரைப்படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் திரைப்படம் பார்க்க அனுமதிக்க மறுக்கப்பட்டதாக வீடியோக்கள் மற்றும் செய்திகள் பரவி வந்தன.
இது தொடர்பாக பேசிய அக்குடும்பத்தினர், “ஒரு அண்ணன் இந்த திரைப்படத்துக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தார். எல்லோருக்கும் டிக்கெட் வாங்கி கொடுத்தார். எங்களுக்கும் வாங்கி கொடுத்தார். நாங்கள் திரைப்படம் பார்க்க போனோம். ஆனால் அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. எங்களை பரிசோதனை செய்துவிட்டு கூட படம் பார்க்க அனுமதியுங்கள் என்று கோரினோம். ஆனாலும் அனுமதிக்கவில்லை” என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தனர். அதன் பிறகான சலசலப்புக்கு பின் தாமதமாக அவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பான ரோகிணி திரையரங்கம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்து இருக்கிறது. இது தொடர்பான ரோகிணி திரையரங்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கையில், “அவர்கள் 12 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளை (2 வயது, 6 வயது, 8 வயது மற்றும் 10 வயது) அழைத்து வந்திருந்தனர். பத்து தல திரைப்படத்துக்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே சட்டப்படி 12 வயதுக்குட்பட்டவர்களை இப்படத்துக்கு அனுமதிக்க இயலாது.
அதன் அடிப்படையில் எங்கள் ஊழியர்கள் அவர்களை முதலில் அனுமதிக்க மறுத்தனர். இறுதியாக, அங்கு இருந்தவர்கள் அதனை புரிந்து கொள்ளாத சூழல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கும் நோக்கில் அவர்கள் திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர்” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.