‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வரும் அக்.25ம் தேதி வெளியாகிறது.
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. ஸ்போர்ட்ஸ் டிராமா கதையம்சத்தில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் டிக்கெட்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான ரோகினி சினிமாஸ் ஓனர் ரேவந்த் சரண், தளபதியின் ஆன்லைன் ரசிகர்கள் சங்க உறுப்பினர்களுடம் Behindwoods-க்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தளபதி திரைப்படம் ரிலீஸ் வரும் போது அதை லாப நோக்கில் ஒருபோதும் பார்த்ததில்லை. தளபதி பிறந்தநாள் கொண்டாட்டம், டிரைலர் வெளியீடு போன்றவற்றுக்கு வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தில் 50% வசூலிக்கப்படும். அதுபோல், எங்களது சொந்த செலவில் பலமுறை கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம்”.
குறிப்பாக தளபதி விஜய்யின் ப்ரீ டிக்கெட் புக்கிங் குறித்து கேட்டபோது, “பொதுவாகவே விடுமுறை தினங்களில் படங்கள் ரிலீசானால், டிக்கெட்டிற்கு பெரும் தட்டுப்பாடு இருக்கும். அதிலும், தளபதி விஜய் படம் என்றால், என்னால் டிக்கெட் வழங்க முடியாது, மிகுந்த அழுத்தம் இருக்கும். முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டுமல்ல ரிலீசாகி 3 நாட்கள் வரை டிக்கெட் விற்பது மிகவும் கடினமான ஒன்று” என்று கூறினார்.
மேலும், பிகில் திரைப்படத்தை பெண்கள் மற்றும் வெளி உலகிற்கு தெரியாத சாதனை பெண்மணிகளுக்காக பிரத்யேக காட்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.