சென்னை: விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்த புதிய படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படம் தியேட்டர்களில் கடந்த ஆண்டு (23.12.2021) ரிலீஸ் ஆனது. சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ராக்கி படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்து உரிமையையும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் கைப்பற்றியது.
இந்த படம் தியேட்டரில் வெளியான பின் விமர்சகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் இன்னும் பெரிய பாராட்டுக்களை பெற்றது. வன்முறையை அழகியலுடன் காட்டியதாகவும், ஐரோப்பிய படங்கள் போல இருப்பதாகவும் விமர்சகர்கள், ரசிகர்கள் பாராட்டினர்.
இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை Wak Aoo பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் தற்போது, செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படமும் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 2011-ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கல்ட் அந்தஸ்து பெற்றுள்ள நியோ நொய்ர் வகைமையில் உருவான 'ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர்.
இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ படத்தில் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர். தனுஷ் நடிப்பில் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.