ஃபெப்சி இயக்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு போட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்துறைகள் முடங்கியுள்ளன. இதில் திரைத்துறையும் அடங்கும். இந்த நிலையில் பலர் தங்களால் முடிந்த உதவிகளை கஷ்டப்படுகிறவர்களுக்கு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திரைத்துறையினர் நலனுக்காக ஃபெப்சி இயக்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியமான கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திரைத்துறையினர் வேலைக்கு செல்லாமல் இருப்பது 50 நாட்களை நெருங்க போகிறது. இதுவரை கிடைத்து உதவிகளை கொண்டு, எப்படியோ சமாளித்து கொண்டாம். இனியும் வேலை முடக்கம் நீடித்தால், பட்டினி சாவுகளை எதிர்நோக்கும் அபாயமே ஏற்படும். அதனால் 17 துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டிருப்பது போல, திரைத்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
குறைந்தபட்சம் படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரீ ரெக்கார்டிங், டப்பிங், போஸ்ட் ப்ரொடக்ஷன், மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் உள்ளிட்டவற்றிக்கு அனுமதி கிடைத்தால், 50 சதவீதம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். அனைத்து கட்டுப்பாடுகளை மதித்து, சமூக இடைவெளியை கடைப்பிடிப்போ என உறுதியளிக்கின்றோம்' என அவர் தெரிவித்துள்ளார்.