ஆர்.ஜே.பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் வீட்ல விசேஷம். ஜூன் 17 முதல் திரையரங்குகளில் ஒளிரும் இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். Badhaai Ho என்கிற இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படமான இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி மற்றும் NJ சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் திரைப்படம் அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு மல்டிவர்ஸ் அல்லது கிராஸ் ஓவர் ஜானர் என்கிற வார்த்தை அதிகம் புழக்கத்தில் நிலவி வருகிறது.
அந்த வகையில் வீட்ல விசேஷம் படத்தின் இறுதிக் காட்சிகளுக்கு முன்னர், ஆர்.ஜே. பாலாஜி தனது அப்பா, அம்மா மற்றும் குடும்பத்துடன் மருத்துவமனைக்கு அவசரமாக போகும்போது, அங்கு எல்.கே.ஜி வருகிறார் என்று சொல்லி ஆரவாரம் செய்வார்கள். ஆர்.ஜே பாலாஜி நடித்தபடம் எல்.கே.ஜி.
இயக்குநர் கே.ஆர்.பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்த எல்.கே.ஜி படம் 2019-ல் வெளியானது. இந்த படத்தில் மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால் உருவாகும் ஒரு நேர்மையற்ற அரசியல்வாதியின் கதையை அரசியல், நைய்யாண்டி கலந்து சொல்லியிருப்பார்கள். எல்.கே.ஜியாக நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி இறுதியில் முதல்வர் ஆவதாக படத்தை முடித்திருப்பார்கள்.
இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள வீட்ல விசேஷம் படத்தில் இந்த எல்.கே.ஜி கேரக்டர் இடம் பெற்றுள்ளது மல்டிவர்ஸ் அல்லது கிராஸ் ஓவர் ஜானரை நினைவுபடுத்துவதாக கூறும் ரசிகர்கள் இந்த தகவலையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
முதிய வயதில் கர்ப்பம் ஆகும் மிடில் கிளாஸ் அம்மாவை சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் கேலி, கிண்டலுக்குள்ளாக்கும்போது, முதலில் அந்த அம்மாவின் பிள்ளைகள் புரிதலுக்கு வருவது தான் வீட்ல விசேஷம் படத்தின் கதைக்களம். அதிலும் கர்ப்பமாகும் பெண்மணியை பேசுபொருளாக்கும் சமூகம் அவரது கணவரை எவ்விதத்திலும் பேசுபொருளாக்குவதில்லை என்பதையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறது படம்.
ஜூன் 17-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த திரைப்படம் காமெடி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் குடும்பத்திரைப்படமாக அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.