பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) இன்று (ஜூன் 14) மும்பையிலுள்ள தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது முன்னாள் மேனேஜராக பணி புரிந்தவர் திஷா சலியன் என்பவர் கடந்த ஜூன் 9-ம் தேதி அதிகாலையில் தனது அபார்ட்மெண்டின் 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியைக் கேட்டு சுஷாந்த் வருத்தம் தெரிவித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
முன்னாள் மேனேஜர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த நிலையில், அவரும் அதே போன்றவொரு முடிவை திஷா இறந்த ஐந்து நாட்களில் தேர்ந்தெடுத்ததை விதி என்பதா அல்லது இந்த மரணங்களுக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தவிக்கின்றனர் ரசிகர்கள்.
சுஷாந்திடம் ஏன் ஒரு ஆண்டு அதிகம் பேசாமல் இருந்தேன், என்னை மன்னிக்க முடியவில்லை என்று பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் தனது இன்ஸ்டாவில் இரங்கல் தெரிவித்திருந்தார். சுஷாந்த் சிங் ராஜ்புத் இனிமையான மனிதர், பொதுவாக அமைதியாக இருப்பவர் என அவரைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்த ரசிகர்கள் துயரில் மூழ்கியுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவரது மறைவிற்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.