சமீபத்தில்தான் இர்பான் கான், ரிஷிகபூர் ஆகியோரை இழந்து துயரத்தில் ஆழ்ந்துள்ள பாலிவுட் திரை உலகம், தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
பிரபல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். லாக்டவுன் காரணத்தால் அந்த வீட்டில் அவர் குவாரண்டைன் ஆகி தனியாக வசித்து வந்தார்.
கிஸ் தேஷ் மே ஹை மேரா தில் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் சுஷாந்த், ஜீ டிவி நிகழ்ச்சிகள் மூலம்,ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.
2013 -ம் ஆண்டின் கை போ சே (Kai Po Che) என்ற அவரது அறிமுகப் படத்துக்குப் பிறகு, சுஷாந்த் ப்ரினிதி சோப்ராவுடன் ஷுத் தேசி (Shuddh Desi) என்ற படத்தில் பணியாற்றினார், பின்னர் பல படங்களில் நடித்தார்.இந்தப் படங்கள் விமர்சனரீதியாக அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. MS Dhoni: The Untold Story படத்தில் தோனியாக நடித்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதன் பின், ஒரே இரவில் இந்திய அளவில் புகழ் பெற்றார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டதால் நாடு முழுவதிலும் உள்ள தோனி ரசிகர்கள் அவரை பாராட்டி அவரது ரசிகர்களானார்கள்.
அவர் கடைசியாக சிச்சோரில் ஷ்ரத்தா கபூருக்கு ஜோடியாக நடித்தார். கல்லூரி வாழ்க்கை மற்றும் பிற்காலத்தில் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய ஏமாற்றங்களை பதிவு செய்த படமிது. இந்தப் படத்தை நிதேஷ் திவாரி இயக்கினார். தற்போது "தில் பேச்சாரா’ என்ற அவரது படம் மே 8-ம் தேதி ரிலீஸ் ஆகவிருந்தது. ஆனால் கொரோனா பிரச்சனையால் லாக்டவுன் ஏற்பட்டதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் பாட்னாவில் பிறந்தார். இவரது சகோதரர் நீரஜ் குமார் பாப்லு ஒரு எம்.எல்.ஏ. மேலும் இவரது மைத்துனர் பீகார் சட்டமன்றத்தில் எம்.எல்.சியாக உள்ளார். சுஷாந்துக்கு மூத்த சகோதரர், இரண்டு சகோதரிகள் மற்றும் தந்தை உள்ளார்கள். அவரது தாய் சுஷாந்துக்கு 16 வயது இருக்கும் போது இறந்துவிட்டார்.
சுஷாந்த் சிங் மறைவு குறித்து நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில், "உண்மையாகவே இந்தச் செய்தி என்னை அதிர்ச்சியில் திக்குமுக்காடச் செய்துவிட்டது. சிச்சோர் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நடிப்பை பார்த்து வியந்தேன் படத்தின் தயாரிப்பாளரும் எனது நண்பருமான சஜித்திடம் நானும் இந்தப் படத்தில் நடித்திருக்கலாம் என்றும், இதில் சுஷாந்தின் நடிப்பை மிகவும் ரசித்தேன் என்றும் சொன்னேன். மிகத் திறமையான நடிகர் அவர் ... கடவுள் அவரது குடும்பத்தினருக்கு இதைத் தாங்க சக்தி அளிக்கட்டும்.
Honestly this news has left me shocked and speechless...I remember watching #SushantSinghRajput in Chhichhore and telling my friend Sajid, its producer how much I’d enjoyed the film and wish I’d been a part of it. Such a talented actor...may God give strength to his family 🙏🏻
— Akshay Kumar (@akshaykumar) June 14, 2020
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்தார். இவரது தற்கொலைகான காரணம் எதுவும் தெரியவில்லை. பாலிவுட் நடிகை ரியா கபூரை சுஷாந்த் சிங் ராஜ்புத் காதலித்து வந்ததாக தெரிகின்றது. ஆனால் இதுகுறித்து மீடியாவில் பேசவில்லை.
அழகும், இளமையும், திறமையும் நிறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைவுக்கு அக்ஷய் குமார், அனுராக் காஷ்யப், மகேஷ் பாபு, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட இந்தியத் துரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் நடிகர் நடிகைகள் தங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.