நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் 'பீஸ்ட்'. ஏப்ரல் மாதம் இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் சிங்கிளான 'ஜாலியோ ஜிம்கானா' ப்ரோமோவை, நேற்று சர்ப்ரைஸாக படக்குழு வெளியிட்டிருந்தது.
முணுமுணுக்கும் ரசிகர்கள்
அனிருத் இசையில், விஜய் பாடியுள்ள இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவில், நெல்சன், VTV கணேஷ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மார்ச் 19 ஆம் தேதி பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் ஜாலியாக பாடும் விஜய்யின் குரல் தான், இந்த பாடலின் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், தற்போதே 'ஜாலியோ ஜிம்கானா' என முணுமுணுக்கத் தொடங்கி விட்டார்கள்.
விஜய் பாடல்கள் ஒரு 'ரீவைண்ட்'
இந்நிலையில், நடிகர் விஜய் இதுவரை பாடியுள்ள பாடல்களை ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்க்கலாம். கடந்த 1994 ஆம் ஆண்டு, விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த 'ரசிகன்' திரைப்படத்தில் தான், தன்னுடைய முதல் பாடலை விஜய் பாடியிருந்தார். இதற்கு இசை அமைத்தவர் தேவா. 'பம்பாய் சிட்டி' என ஆர்மபிக்கும் இந்த பாடல், விஜய்யை ஒரு பாடகராக முன்னிறுத்தி இருந்தது.
தொடர்ந்து, 1995 ஆம் ஆண்டு, வெளியான 'தேவா' திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்களை விஜய் பாடியிருந்தார். இந்த படத்திற்கும் தேவா தான் இசை. இதில், 'அய்யய்யோ அலமேலு' என தொடங்கும் பாடல், ரசிகர்களை துள்ளல் போட வைத்திருந்தது.
சூர்யா படத்தில் விஜய்
விஷ்ணு படத்தில் வரும் 'தொட்ட பெட்டா ரோட்டு மேல' என்ற பாடல், அந்த சமயத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட விஜய்யின் பாடலாக அமைந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக, இளையராஜா இசையிலும் பாடி விட்டார் விஜய். 'காதலுக்கு மரியாதை' படத்தில் வரும் ஓ பேபி பேபி பாடல், விஜய்யின் குரலை முற்றிலும் புதிதாக கேட்க வைத்திருந்தது. இதனிடையே, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான பெரியண்ணா திரைப்படத்திலும் பாடலை பாடி இருந்தார் விஜய்.
கூலாக பாடுனாரு
அடுத்தபடியாக, 'பத்ரி' படத்தில் வரும் 'என்னோட லைலா' பாடலை மிகவும் கூலாக, அதே வேளையில் ஜாலியாகவும் பாடி அசத்தி இருப்பார் விஜய். அடுத்து வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து பாடிய 'போடாங்கோ' என்ற பாடல், ஆல் ஏரியாவிலும் கில்லியாக ஹிட்டடித்திருந்தது.
25 ஆவது பாடல்
இதன் பிறகு, சச்சின் திரைப்படத்தில் வரும் 'வாடி வாடி' தான் விஜய்யின் 25 ஆவது பாடலாக அமைந்திருந்தது. தொடர்ந்து, சில திரைப்படங்களில் பாடாமல் இருந்து வந்த விஜய், துப்பாக்கி படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடிய 'கூகுள் கூகுள்', பாடகர் விஜயின் ரேஞ்ச்சையே அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றது.
'வாங்கண்ணா வணக்கங்கண்ணா', 'கண்டாங்கி கண்டாங்கி', 'செல்ஃபி புள்ள', 'வெறித்தனம்', 'குட்டி ஸ்டோரி' என தொடர்ந்து பாடிய அனைத்துமே ஹிட் வரிசைகள். அந்த வகையில், தற்போது ஜாலியோ ஜிம்கானாவின் ப்ரோமோவுக்கே, ரசிகர்கள் துள்ளல் மோடில் இருக்கும் நிலையில், முழு பாடலுக்காக வெயிட்டிங்கில் உள்ளனர்.