தமிழ் சினிமாவின் ஆதிகாலம் முதல் இன்று வரை, காதல் மன்னன் என்று சொன்னால், ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது ஜெமினி கணேசன்தான். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், பல்வேறு உயரிய விருதுகள், கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் என நிறைந்திருந்தது ஜெமினி கணேசனின் வாழ்க்கை. அவரின் இந்த 101-வது பிறந்தநாள் தினத்தில், ஜெமினி கணேசனின் வாழ்க்கை குறித்த இதோ ஒரு பார்வை.
புதுக்கோட்டையில் பிறந்த ஜெமினி கணேசன் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பின்னர், ஒரு மருத்துவராகும் கணவோடு இருந்தார். இதே நேரத்தில் அவருக்கு அலமேலு என்பவருடன் திருமணமும் நடந்திருந்தது. இப்படியான சூழலில், குடும்பத்தின் நிலையுணர்ந்து தனக்கான ஒரு வேலையை தேடி கொள்ள வேண்டியிருந்தது ஜெமினி கணேசனுக்கு. இதனால் மெட்ராஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் ஆசியராக வேலை பார்த்து வந்தவரின் வாழ்வை, மாற்றியமைத்தது ஜெமினி ஸ்டுடியோவில் கிடைத்த புரொடக்ஷன் எக்சிக்யூட்டிவ் வேலை.
இதுவே, பிற்காலத்தில் கணேசன் என்ற அவரை, ஜெமினி கணேசன் என மாற்றியது. தொடர்ந்து சினிமா நடிகர்களின் தேர்வு உள்ளிட்ட வேலைகளில் இறங்கி, கோடம்பாக்கத்தில் பம்பரமாக சுழலத் தொடங்கினார் ஜெமினி கணேசன். அப்போது வந்ததுதான் அவருக்கான முதல் பட வாய்ப்பு. எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் வாழ்க்கையை தழுவி உருவான மிஸ் மாலினி திரைப்படத்தில் நடித்தார் ஜெமினி. ஆனால், படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை தழுவியது.
அடுத்தடுத்த ஜெமினி நடித்த படங்கள் சில வெற்றியடைந்தாலும், மக்கள் யாரும் அவரை பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கவில்லை. மீண்டுமொரு மேஜிக்காக அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த திரைப்படம்தான் 'மனம்போல் மாங்கல்யம்'. இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சாவித்ரி. இந்த திரைப்படம் ஜெமினி கணேசனின் சினிமா பயணத்திற்கு வலுவான அடித்தளம் இட்டுகொடுத்தது எனலாம். பிற்காலத்தில் இவர்களின் ஜோடியில் வெளியான பல திரைப்படங்கள் ஹிட் அடித்தது.
இதை தொடர்ந்து, ஜெமினி கணேசன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறினார். ஒரு பக்கம் எம்.ஜி.ஆரின் படங்கள் மாஸ் காட்ட, சிவாஜியின் படங்கள் க்ளாஸ் அப்லாஸ் வாங்கி கொண்டிருந்தது. இதற்கிடையில், தனக்கான பாணியாக ரொமான்ஸை தேர்ந்தெடுத்து, அதில் அவருக்கான வெற்றியை கொடுக்க தொடங்கினார் ஜெமினி. கல்யாண பரிசு, தேன் நிலவு, கொஞ்சும் சலங்கை, சாந்தி நிலையம் உள்ளிட்ட ஜெமினியின் பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே ஹிட் அடித்தது.
மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களான அஞ்சலி தேவி, பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா என பலருடன் சேர்ந்த நடித்து வெற்றிகளை குவித்தார் இந்த காதல் மன்னன். காலங்கள் உருண்டோட, கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவில் இருந்து கேரக்டர் ரோல்களுக்கு வந்த ஜெமினி அதிலும் தனது ட்ரேட்மார்க்கை பதிவு செய்யத் தொடங்கினார்.
உன்னால் முடியும் தம்பியில் கண்டிப்பான அப்பாவாகவும், அவ்வை சண்முகியில் முதுமையிலும் காதல் வழியும் குறும்புகார தாத்தாவாகவும் வெரைட்டி காட்டி, ரசிகர்களிடம் லைக்ஸ் வாங்கினார் ஜெமினி கணேசன். மேட்டுக்குடி படத்தில் கார்த்திக் - கவுண்டமணி கூட்டணியுடன் இவர் செய்த நகைச்சுவை அட்டகாசம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ’ஜெமினி’, ’அடிதடி’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஜெமினி கணேசனாகவே வந்து லவ் மெமரீஸ் தூவி ரகளை செய்தார் இவர்.
எம்.ஜி.ஆர் - சிவாஜி என இருபெரும் நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த நேரத்தில், தனக்கான தனி பாணியை உருவாக்கி, அதில் பெரும் வெற்றியும் பெற்றவர், ஜெமினி. மேலும் பெரிதாக ரசிகர் மன்றங்களை ஊக்கிவிக்காமலும், அரசியல் உள்ளிட்டவற்றில் இருந்து ஒதுங்கி இருந்தும் அவரின் வாழ்க்கையை அமைத்துக்கொண்டது அவருக்கான சிறப்பை மேலும் அதிகரித்தது என சொல்லலாம்.
ஜெமினி கணேசனின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு இருந்தாலும், சாதாரண புரொடக்ஷன் மேனஜரில் தொடங்கி, இந்தியாவின் உயரிய விருதான பத்மஶ்ரீ வரை நீண்ட அவரது பயணம், இன்னும் எத்தனையோ தலைமுறைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக அமையக்கூடியது. பட்டாம்பூச்சிகளுக்கு நடுவில் பூவாய் மலர்ந்த ஜெமினி கணேசனின் 101-வது பிறந்தநாளில் அவரை மனம் நிறைந்து வாழ்த்துவோம்.!