தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பெரும்பாலான இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி பல தலைமுறை ரசிகர்களை தனது குரலால் கவர்ந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அனைத்து விதமான பாடல்களையும் திறம்பட கையாளக்கூடியவர்.
எஸ்பிபி கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திடீரென அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதனையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அவரது உடல்நிலை குறித்து தகவல் பகிர்ந்து வந்தார். கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
இந்நிலையில் மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து அவர் இன்று மதியம் சரியாக 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு நாடு முழுவதும் பிரபலங்கள் மற்றும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழும் காட்சிகள் காண்போரை உருகச் செய்துள்ளது.