ஏப்ரல் 6-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதற்குமான சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. பலரும் ஜனநாயக உணர்வுடனும் வாக்களித்து வரும் இந்தத் தேர்தலை ஒட்டி திரைப்பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர்.
திரைப்பிரபலங்களாக இருந்தால் என்ன? ஜனநாயகக் கடமை ஆற்றுவதில் யாவரும் நாட்டின் குடிமக்கள் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் நடிகர்கள் ரஜினி, அஜித், கமல், ஷாலினி, சிவகார்த்திகேயன்,ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன், விக்ரம், பிரசன்னா, அருண் விஜய், கருணாகரன் மற்றும் பலரும் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் இருந்து முகத்தில் மாஸ்க் கட்டிக்கொண்டு சைக்கிளில் வந்த விஜய் வாக்களித்துவிட்டு சென்றார். இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் தான் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. ஆனால் எப்போதும் ஓட்டு போடும் போது காரில் வரும் விஜய் இம்முறை ஏன் சைக்கிளில் வந்தார்? அவர் சைக்கிளில் வந்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி பலரும் பேசி வருகின்றனர். சிலர் சிற்சில வதந்திகளையும் பரப்பி வருகின்றனர்.
ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது பற்றி, விஜய் தரப்பில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பினை மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹமது வெளியிட்டுள்ளார். அதன்படி, நீலாங்கரையில் இருக்கும் வாக்குச்சாவடியில் இருந்து மிகவும் அருகில் இருக்கும் விஜயின் வீட்டில் இருந்து அவர் காரில் வந்தால், ஓட்டு போட வரும் மற்றவர்களுக்கு இடையூறாக தேவையில்லாத டிராஃபிக் ஆகும் என்பதால் விஜய் சைக்கிளில் சென்று ஓட்டுப்போட வந்ததாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.