வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.
'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் முதல் முறையாக இணைந்துள்ளார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிந்துள்ளனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் வெளியான பின்னான விழாவில் பேசிய நடிகர் சிம்பு, “இந்த திரைப்படத்தினை பொருத்தவரை, வெளியில் இருப்பவர்கள் யாரும் என் உடலை வைத்து என்னை கிண்டல், கேலி செய்ய வழியில்லை. உருவ கேலி செய்யவில்லை. அது ஒரு தவறான விஷயம். ஒருவருடைய உடலை வைத்து உருவ கேலி செய்யக்கூடாது. சிலர் அதை பண்ணுகிறார்கள், அது யார் என்று சொல்லத் தேவையில்லை, அனைவருக்குமே தெரியும். நம்மை தட்டிவிடத்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். தட்டிக்கொடுக்க யாரும் இங்கு இல்லை” என தெரிவித்திருந்தார்.
இந்த விழாவில் பேசிய இயக்குனர் கௌதம் மேனன், “நன்றி மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடலாம் என்று தோன்றுகிறது. எந்த அளவுக்கு பேசலாம் என்று தெரியவில்லை. ஏதாவது பேசினால் தவறாகிவிடுமோ என தோன்றுகிறது. படம் பார்ப்பதற்கு முன் நன்றாக இரவு தூங்கிவிட்டு, அதிகாலை முதல் ஷோவுக்கு வாருங்கள் என்று கூறியிருந்தேன். அதை பெரிதாக்கி விட்டார்கள். தயாரிப்பாளருடைய நேர்காணலிலும் சென்று, அவரிடம் இதே கேள்வியை கேட்டு விட்டார்கள். அவர் என்னிடம் போன் பண்ணி என்ன சார் இப்படி சொல்லிவிட்டீர்கள் என்று கேட்கிறார்.
ஆனால் உண்மையில் நான் சொன்னதற்கு அர்த்தம் அதுவல்ல. ஒரு ஃபிளைட்டை 5 மணிக்கு பிடிக்க வேண்டுமென்றால் கூட என் அம்மா நேரமே தூங்கி விட்டு போடா என்று சொல்வார்கள். ஃபிளைட்டில் தூங்கலாம் என்று அவருக்கும் தெரியும். இருந்தாலும் சீக்கிரம் தூங்குடா அப்போதுதான் பிரஷ்ஷாக போக முடியும் என்று சொல்வார். அதைத்தான் நான் சொல்லியிருந்தேன். எனவே எனது மற்ற படங்களை விட இந்தப் படத்துக்கு நல்ல மதிப்பீடுகள் வந்திருக்கின்றன. அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாகவும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம், எங்களுடைய குழு அந்த விமர்சனங்களையும் கவனித்து வருகிறது.” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய இயக்குனர் கௌதம் மேனன் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர்கள், படக் குழுவினர் உட்பட அனைவருக்கும் தனித்தனியே நன்றியை தெரிவித்து பேசினார்.