அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர். இது வரை தமிழகம் முழுவதும் 100+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் மட்டும் இதுவரை முந்நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த நாளில் 300+ கோடி ரூபாய் வசூலை பொன்னியின் செல்வன் படம் எட்டியுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி குறித்து ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ISC தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "பொன்னியின் செல்வன் போன்ற ஒரு மாபெரும் படத்தில் நான் அங்கம் வகிப்பதில் பெருமை அடைகிறேன்.
இந்த திரைப்படம் இப்போது எனது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ளது, மேலும் இது எனக்கு திரைப்படத் தயாரிப்பில் ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது. இந்த அற்புதமான மற்றும் நீண்டப் பயணம் (கென்) வண்ணக்கலைஞர், உதவி ஒளிப்பதிவாளர்கள், படக்குழுவினர், ஃபோகஸ் புல்லர், ஜிம்மி என அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களாலும் சாத்தியமானது.
ஜிப் குழுவினர், ஸ்டெடிகேம் குழுவினர், பாந்தர் க்ரூ, ட்ரோன் குழுவினர் மற்றும் லைட்டிங் குழுவினர் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பணிபுரிந்து, எனக்காக ஒரு நல்ல வேலையைச் செய்வதை சாத்தியமாக்கினர். அவர்கள் இல்லாமல் இந்த நிலை இருக்காது.
PS-1 மாபெரும் வெற்றி பெற்றதற்கு காரணம், சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தாங்கள் செய்தவற்றில் மிகச் சிறந்ததை அளித்து, மணிரத்னத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் படத்தினை உருவாக்கினர்.
என்னையும் உள்ளடக்கிய பலரின் கனவை நனவாக்கிய மணிரத்னம், செல்லுலாய்டில் இப்படியொரு காவியமான நாவலை உயிர்ப்புடன் கொண்டுவரும் திறன் கொண்டவர். பல தடைகள் தீர்க்கப்பட்டு, பல பாடங்களைக் கற்றுக்கொண்ட நீண்ட பயணம் இது.!" என ரவி வர்மன் ISC கூறியுள்ளார்.
இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.
சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர். இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.