பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகர் அபிஷேக் பச்சன் , ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவர்கள் பூரண நலம் பெற நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் அனுபம் கேர் தனது அம்மா கொரோனா பாதித்துள்ளது குறித்து உருக்கமாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் , அவரது அம்மா நீது கபூர் இயக்குநர் கரண் ஜோகர் ஆகியோருக்கு கொரோனா பாதித்துள்ளதாக ட்விட்டரில் தகவல் ஒன்று பகிரப்பட்டது. மேலும் மூவரும் அமிதாப் பச்சனுடைய பேரனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டது..
இதனையடுத்து இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இதனை ரன்பீர் கபூரின் சகோதரி ரிதிமா கபூர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''கவனம் ஈர்ப்புக்காக செய்கிறீர்களா ? குறைந்த பட்சம் இந்த தகவலை உறுதிப்படுத்த முயன்றீர்களா ? நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.