ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா. அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்க பிரபல தயாரிப்பாளர் கரன் ஜோகர் தயாரித்துள்ளார். பிரமாண்ட படைப்பாக பெரும் பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் இந்த முதல் பாகத்தை Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர்.
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சனும் நடித்திருக்கிறார். தவிர, இப்படத்தில் நடிகர் ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரமோஷன் இன்று சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் ரன்பீர் கபூர், நாகார்ஜூனா, இயக்குனர் ராஜமெளலி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ரன்பீர் கபூர் ஆலியா பட் கர்ப்பத்தின் எடை குறித்த தனது கமெண்டுக்கு மன்னிப்பு கேட்டார். “முன்னதாக பிரம்மாஸ்திரா படத்தை ஏன் பெரிதாக புரோமோட் செய்யவில்லை?” என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு ஆல்யா பட் பதில் சொல்லும்போது, “அப்படியில்லை நிச்சயமாக நாங்கள் பிரம்மாஸ்திராவை புரமோட் பண்ணுவோம். ஆனால் இப்போதைக்கு எங்களின் கவனம் குழந்தையின் மீதுதான்” என்று சொல்ல, அப்போது குறுக்கிட்ட ரன்பீர், ஆலியாவின் கர்ப்ப எடை அதிகரித்தது பற்றி ஒருவரி கூற, அப்போதுஅவரை அதிர்ச்சியில் ஆலியா பார்த்தார். பின்னர் தான் ஜோக் அடித்ததாக கூறி அவரை தட்டிக் கொடுத்தார்.
ஆனால் ஒரு கர்ப்பவதியைப் பார்த்து இப்படிச் ரன்பீர் சொன்னதற்காக நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களை கூறிவந்தனர். இந்நிலையில் இன்று சென்னையில் இதுகுறித்து பேசிய ரன்பீர், “முதலில் நான் என் மனைவியை வாழ்வின் அனைத்திலும் நேசிக்கிறேன். நான் செய்தது வேடிக்கையான ஒரு நகைச்சுவை தான், வேறு நோக்கம் இல்லை.
இதனால் உணர்ச்சிவசம் தூண்டப்பட்டிருந்தாலோ அல்லது புண்படுத்தப்பட்டிருந்தாலோ, அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆலியாவிடம் பின்னர் இதுபற்றி கூறினேன். ஜோக் தான் அடித்தேன் என சொன்னேன். அவரும் உண்மையில் சிரித்தார், உண்மையில் நான் ஒரு மோசமான நகைச்சுவை உணர்வைக் கொண்டவனாக இருக்கிறேன், அது சில சமயங்களில் இப்படி என் முகத்திலேயே விழும். யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்” என்றார்.
இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் இருந்து, நவீன உலகிற்கு தகுந்தாற்போல் உருவாகியுள்ள கற்பனை கதைதான் இந்த திரைப்படம். கரன் ஜோகர், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட் போன்றவர்களின் பங்களிப்பினால் இப்படம் 8 வருட கடின உழைப்புக்கு பின் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் அஸ்திரங்களை பற்றி கமர்சியலாக பேசுகிறது.