தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடுகட்ட முடியாத மிகப்பெரிய இழப்பாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த விவேக் சினிமா மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சினிமாவில் நுழைந்தார். தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தனது காமெடிகளால் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த பெருமை அவருக்கு சேரும். எனவே தான் அவர் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார். மேலும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசின் மாநில விருது, எடிசன் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
தனது திரைப்படங்கள் மூலமாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை கூறி, ‘சின்ன கலைவாணர்’ என அனைவராலும் ஒருமனதாக பாராட்டப்பட்ட, பத்மஸ்ரீ நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அதேபோல, நிஜ வாழ்க்கையில் இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விவேக், மரம் நடுதலின் அவசியத்தை அனைவரிடமும் வலியுறுத்தி வந்தார். மேலும் தனது வாழ்நாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதை தனது லட்சிய கனவாக கொண்டு செயல்பட்டு வந்த அவர், 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டு செயற்கரிய பணியையும் செய்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரான ரம்யா பாண்டியன் நடிகர் விவேக்கின் ஞாபகமாக அவரது வயதான 59 மரக்கன்றுகளை திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் நட்டுவைத்து தனது அஞ்சலியை நிறைவேற்றியுள்ளார்.