நடிகர் ராமராஜன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். மக்கள் நாயகன் என தமிழ் சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர்.
ராமராஜன், 1977 ஆம் ஆண்டு தொடங்கி சிறிய வேடங்களில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். மண்ணுக்கேத்த பொண்ணு (1985) மூலம் இயக்குனராக அறிமுகமானார். 1986 இல் வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தில் கதாநாயகனாக தனது அறிமுகம் ஆனார். இவர் கிராமம் சார்ந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவரது கரகாட்டகாரன் (1989) திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. திரையரங்குகளில் இந்த படம் 400 நாட்கள் ஓடியது. கரகாட்டக்காரன் படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களில் மிகவும் முக்கியமான படமாகும்., மேலும் பல படங்களும் ராமராஜன் நடிப்பில் நூறு நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தவை. மேலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்ட ராமராஜன், 1998 ஆம் ஆண்டு திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 12வது மக்களவைக்குத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராமராஜன், 2001 ஆம் ஆண்டு சீறி வரும் காளை படத்திற்கு பிறகு 2012 ஆம் ஆண்டு 'மேதை' படத்தில் நடித்து இருந்தார்.
தற்போது ராமராஜன் மீண்டும் ஹீரோவாக தனது 45வது படமான சாமானியன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் மற்றும் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நடிகர் ராமராஜனுடன் எம்.எஸ். பாஸ்கர், ராதா ரவி ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். ராகேஷ் இப்படத்தினை இயக்கி வருகிறார். மதியழகன் இப்படத்தினை தயாரிக்கின்றார். இப்படம் 5 மொழிகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் ராமராஜன், விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யாரு? சாம்பியன்ஸ் சீசன் - 4 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சின்னத்திரை நிகழ்ச்சியில் முதல்முறையாக நடிகர் ராமராஜன் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் நடுவர்கள் மதுரை முத்து, தாடி பாலாஜி, ஆகியோர் ராமராஜனுக்கு மாலை அணிவித்து, நெற்கதிர் கொடுத்து வரவேற்றனர்.
இதில் கரகாட்டக்காரன் கார், கவுண்டமணி பற்றியெல்லாம் நினைவுகளை பகிர்ந்த நடிகர் ராமராஜன், தன்னை மட்டும் கவுண்டமணி அண்ணன் கலாய்த்ததே இல்லை என பெருமிதமாக குறிப்பிட்டார். அப்போது சொப்பன சுந்தரி காமெடி வசனம் ஹிட் ஆனது குறித்தும் பேசப்பட்டது, அந்த சமயத்தில் பேசிய நடிகர் ராமராஜன், கராகாட்டக்காரன் கார் காமெடியை தன்னால் மறக்க முடியாது என்றும், அதே பாணியில் இயக்குநரிடம், “இப்போது கராட்டக்காரன் படத்தை எந்த டிவி வெச்சிருக்காங்க” என Fun ஆக கேட்டதாக ஜாலியாக குறிப்பிட்டார்.