தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். மக்கள் நாயகன் என தமிழ் சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ராமராஜன் 1977 ஆம் ஆண்டு முதலே சிறிய வேடங்களில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.
மண்ணுக்கேத்த பொண்ணு (1985) மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், 1986-ல் வெளியான ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ திரைப்படத்தில் கதாநாயகனாக தனது அறிமுகம் ஆனார். கிராமம் சார்ந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். குறிப்பாக கரகாட்டகாரன் (1989) திரைப்படம் திரையரங்குகளில் 400 நாட்கள் ஓடி, தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களில் மிகவும் முக்கியமான படமாகும்.
இந்நிலையில் நடிகர் ராமராஜன் நடிப்பிலான 45வது படமாக எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ளது‘சாமான்யன்’ எனும் படம். இப்படத்தின் டீசரும் தற்போது வெளியாகியுள்ளது. ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி இடம்பெறும் இந்த டீசரில், சாமானியர்களான ராமராஜன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி ஆகியோர் சில காரணங்களுக்காக மனிதர்களை கடத்தி கொல்வதாக காட்டப்படுகிறது. இதில், ‘உங்க கேம் ஓவர் ஆகிடுச்சு’ என மைம் கோபி சொல்ல, அப்போது ராமராஜன், ‘எங்க கேமே இப்பதான் ஸ்டார்ட் ஆகுது’ என ஃபார்முலா ஸ்டைலில் பஞ்ச் வசனம் பேசுகிறார்.
இந்நிலையில் சாமானியன் பட டீசர் வெளியீட்டு விழாவிற்கு திடீர் சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குனரும் நடிகருமான சந்தானபாரதி பேசும்போது, ‘முப்பது வருடங்களுக்கு முன்பு கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் இணைந்து நடித்தோம். தமிழ்நாட்டில் இப்போது என்னை மூலை முடுக்கெல்லாம் பலருக்கும் தெரிகிறது என்றால் அதற்கு காரணம் கரகாட்டக்காரன் படமும் அதில் ராமராஜனுக்கு வில்லனாக நடித்ததும் தான். இத்தனை வருடம் கழித்து அவர் மீண்டும் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சி” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, ‘பாண்டவர்கள் 12 வருடம் வனவாசம் சென்றார்கள். ராமாயணத்தில் ராமன் 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்றான். அதேபோல இந்த ராமராஜன் பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்திருக்கிறார். அப்படி வனவாசம் சென்று வந்தவர்கள் அனைவருமே அரசாண்டதுபோல, இவரும் நிச்சயமாக அரசாள்வார். ” என்று கூறினார்.
மேலும் ராமராஜன் பேசும்போது, “இந்த விழாவுக்கு கனகாவை அழைத்திருந்தோம். படத்தின் டைட்டில் மிகவும் முக்கியம். டைட்டில் என்பது படத்துக்கு உயிர் போன்றது. அதனால்தான் 2வது பார்ட் என்பதற்கு பதிலாக அந்த படத்துக்கும் நல்ல டைட்டில் வைக்க வேண்டும். 2வது குழந்தைக்கு பார்ட்-2 என வைக்க முடியுமா?.. கரகாட்டக்காரன் படத்துக்கும் கங்கை அமரன் அண்ணன் பார்ட் 2 பண்ணலாம் என்றார். நான் சொன்னேன், அண்ணே வெச்சாச்சு ஆடியாச்சு.. ஓடியாச்சு.. கேர்ஃபுல்லா டீல் பண்ணனும் என்றேன், அந்த பார்ட் -2 என்பதே வேண்டாம்..” என்று குறிப்பிட்டார்.