பிக்பாஸ் வீட்டுக்குள் பல்வேறு டாஸ்குகள் வழக்கமாக கொடுக்கப்படுவது உண்டு. அந்த வகையில் கடைசியாக காயின் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த டாஸ்க் முடிந்தவுடன் அபிஷேக் பிக்பாஸ் வீட்டை விட்டு இரண்டாவது ஆளாக வெளியேறினார். முன்னதாக நாடியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்
இதன் பிறகு தற்போது பட்டிக்காடா பட்டணமா என்று நகரவாசிகளாகவும் கிராமவாசிகளாகவும் பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு பட்டிமன்றங்களில் பேச வைக்கப்பட்டனர். அதன்படி ராஜூ, அபினய், தாமரை செல்வி, சின்ன பொண்ணு, அக்ஷரா, மதுமிதா ஆகியோர் ஒரு அணியிலும், பிரியங்கா, சிபி, நிரூப், வருண், சுருதி ஆகியோர் ஒரு அணியிலும் அமர்ந்துகொண்டனர். இசைவாணி நடுவராக இருந்தார்.
தொடர்ந்தவர்கள் கிராமவாசிகள், நகரவாசிகள் என்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஆடை அணிவதை வைத்து கிராமவாசிகள் மற்றும் நகரவாசிகள் அடையாளம் கண்டு கொள்ளப்படுவதும், இதேபோல் நகரத்துக்கு வந்த பிறகு ஆடைகள் மாறுவதும் குறித்தும் ராஜூ பேசியிருந்தார். இதனை தொடர்ந்து பேசிய தாமரை, பிரியங்காவை குறிப்பிட்டு அடக்கமாக இருப்பது பற்றி கூறினார். அதாவது பிரியங்கா அவர் அளவில் அடக்கமாகவே இருப்பதாக தாமரை தெரிவித்திருந்தார். ஆனால் சுருதியின் உடை அணிவது குறித்து பேசிய தாமரை, சேலத்தில் பிறந்த சுருதி இப்படி மிகவும் நகர பாணியில் உடை அணிவது தனக்கு பிடிக்கவில்லை என்பது போல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சிபி, தாமரையை பார்த்து, “யார் தான் அடக்கம்? நீங்கள் அடக்கமாக இருக்கிறீர்களா?” என்று கேட்டு கொதிக்கத் தொடங்கினார். இதேபோல் சுருதி ஆடை அணிவது என்பது அவருடைய தனி உரிமை என்றும் கிராமவாசிகள் என்றால் இப்படி ஆடை அணியக் கூடாதா? என்றும் சிபி கேள்வி கேட்டு இருந்தார். இந்நிலையில் பிரியங்கா நகரவாசிகளுக்காக பேசும்போது தங்களுடைய அணியில் 4 காயின்கள் இருப்பதாக கூறினார். ஆனால் கிராமவாசிகள் அணியிடம் எதுவுமே இல்லை.. சுவாகா.. என்று தெரிவித்தார். மேலும் இந்த காயின்களை நகரவாசிகள் நியாயமாக எடுத்ததாகவும் பிரியங்கா கூறினார்.
இதனைத் தொடர்ந்து தாமரைக்கு கோபம் வந்துவிட்டது. எது நியாயம்? நான் அந்த நிலைமையில் இருக்கும் பொழுது அப்படி ஏமாற்றி எடுத்தது நியாயமா? என்று பொசுக்கென கேட்டுவிட்டார். முன்னதாக தாமரை ஆடை மாற்றும் போது பாவனி மற்றும் சுருதி இருவரும் பேசி வைத்துக்கொண்டு, பாவனி தாமரைக்கு உதவி செய்வது போல திசை திருப்ப, சுருதி தாமரையின் காயினை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். இதை சுருதியும் பாவனியும் நியாயப் படுத்தி வந்தனர். எனினும் தாமரை அவர்களிடம் கோபமாக பேசிவிட்டு இது நம்பிக்கை துரோகம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனை தற்போது தாமரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேச, நகர வாசிகளுக்கும் கிராம வாசிகளுக்கும் கொஞ்சம் முட்டிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து தாமரையை தனியே அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்திய ராஜூ, “எதுவாக இருந்தாலும் இப்படி கத்தாதே.. இந்த பிக்பாஸை உன்னுடைய அடுத்த வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்.. மீண்டும் வெளியே சென்று சினிமாவில் நகைச்சுவை நடிகையாக முயற்சி செய்வதாக கூறினாய் அல்லவா?
அப்படியானால் நகைச்சுவையை செய்.. இனிமேல் உன்னிடம் அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.. எதற்கெடுத்தாலும் கத்திக்கொண்டே இருந்தால், உன்னிடம் நியாயமே இருந்தாலும்.. யாருக்கும் தெரியாது.. புரியாது.. தவறாக தான் நினைப்பார்கள் பார்ப்பவர்கள்!” என்று அட்வைஸ் செய்தார்.