இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கும் விழாவிற்கு தான் செல்லவிருப்பதை நடிகர் ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றியை பெற்று தனிப்பெரும்பாண்மையுடன் வரும் 30ம் தேதி நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமையவுள்ளது. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் நாடாளுமன்ற தேர்தல், பாஜகவின் வெற்றி குறித்து பேசினார். அவர் பேசுகையில், ‘ஜவர்ஹலால் நேரு, இந்திரா காந்தி, ராகுல் காந்தி வரிசையில் வரலாற்று பெருமையுடன் மோடி ஆட்சியமைக்கவுள்ளார். அவரது பதவியேற்பு விழாவிற்கு செல்கிறேன்’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சி ஆரம்பித்து குறுகிய நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 4% கனிசமான வாக்குகளை பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், தனது நண்பருமான கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஜனநாயகம் நிலையாக இருக்க வலுவான எதிர்க்கட்சி தேவை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகக் கூடாது. காங்கிரஸ், மிகவும் பழமையான கட்சி. ஒரு இளைஞராக அங்குள்ள மூத்த தலைவர்களை சமாளிப்பது ராகுல் காந்திக்கு எளிமையான விஷயம் அல்ல எனவும் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.