அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையாக “பொன்னியின் செல்வன்” திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இப்படம் தொடர்பாக வாழ்த்து தெரிவித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள, நடிகர் ஜெயம் ரவி, “அந்த 1 நிமிட உரையாடல் எனது நாளை, எனது ஆண்டாக மாற்றியது. எனது வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை சேர்த்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. பணிவுடனும், ஆசீர்வதிக்கப் பட்டவனாகவும், நீங்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.