பாடகர் எஸ்பிபியின் மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பல வருடங்களாக என்னுடைய குரலா இருந்துள்ளீர்கள். உங்களது குரலும், உங்களது நினைவுகளும் என்னுடன் எப்பொழுதும் இருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் பேசிய ரஜினிகாந்த், ''கடைசி நிமிடம் வரை உயிருக்குப் போராடி பாடகர் எஸ்பிபி நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவரது துயரம் மிகுந்த வேதனையளிக்கிறது. அவருக்கு ரசிகர்களாக இல்லாதவங்களே இந்தியாவில் இருக்கமாட்டார்கள். அவருக்கு தெரிந்தவர்கள், அவர் பாட்டை விட அவர் குரலை விட அவரை நேசித்தார்கள். காரணம் அவருடைய மனித நேயம்.
அவர் சிறியவர்கள் பெரியவர்கள் என பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் மதித்தார். அன்பு செய்தார். மிகவும் அருமையான மனிதர். இந்திய திரையுலகம் எத்தனையோ பாடகர்களை உருவாக்கியிருக்கு. அவர்கள் அனைவருக்கும் இல்லாத ஒரு சிறப்பு நம் எஸ்பிபிக்கு இருக்கிறது. காரணம் அவர்கள் எல்லோரும் குறிப்பிட்ட மொழியில் பாடி புகழ்பெற்றவர்களாக இருந்தார்கள்.
ஆனால் எஸ்பிபி பல மொழிகளில் பாடி இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அவரை தெரியும். அவருடைய இனிமையான கம்பீரமான குரல் நூறு ஆண்டுகள் ஆனாலும் கூட நம்மிடையே இருக்கும். ஆனால் அந்த குரலுக்கு சொந்தக்காரர் நம்மிடையே இல்லை எனும் போது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.