சென்னை : ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன், சார்பில் இலவசமாக TNPSC பயிற்சி பெற, அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தை, தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பாண்டியராஜ், சதீஷ், பிரகாஷ்ராஜ் போன்ற பலரும் நடித்திருந்தனர்.
அண்ணாத்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். தீபாவளி அன்று வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கினார்.
அண்ணாத்த
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அண்ணாத்த திரைப்படம், சமீபத்தில் சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.இந்த படம் குறித்து சமீபத்தில் ரஜினிகாந்த் ஆடியோ வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஆடியோ வெளியீடு
அண்ணாத்த படம் டிசம்பர் 19, 2019ல் ஸ்டார்ட் பண்ணோம். 35 நாட்கள் ஷூட்டிங் முடித்த பிறகு மார்ச் இறுதியில் மீண்டும் படப்பிடிப்பை தொடர முடிவு செய்தபோது கொரோனா வந்துடுச்சு. கொரேனா வந்த பிறகு 9 மாதங்கள் கேப். 9 மாதங்கள் கழித்து டிசம்பர் 14ம் தேதி ஷூட்டிங்கிற்கு போனோம். எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும், கோவிட் டெஸ்ட் பண்ண வேண்டும் என்று ஸ்ட்ரிக்டாக ஷூட்டிங் பண்ணோம்.
அப்பொழுது கீர்த்தி சுரேஷின் உதவியாளருக்கு கொரோனா வந்துடுச்சு. அவருக்கு 5 நாட்களுக்கு முன்பே கொரோனா வந்திருக்கு. யாருக்குமே தெரியல. எல்லோருக்கும் ஷாக். டேக்கில் மட்டும் தான் மாஸ்க் இல்லாமல் இருப்போம். கீர்த்தி சுரேஷுடன் நெருங்கி நடித்தேன். உதவியாளரும் கூடவே இருந்தார். இதை பார்த்து எல்லோருக்கும் ஷாக். எப்படி நீங்க சொல்லலனு சொல்லி திட்டினார் சிவா. இது போல் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார் ரஜினிகாந்த்.
மாணவர்களுக்கு உதவி
சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில், அவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கு, ரஜினி பவுண்டேஷன் பல சிறப்பான வேலைகளையும் செய்து வருகின்றனர். சமீபத்தில் இந்த ஃபவுண்டேஷன் சார்பில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன் இலவச டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு பயிற்சிக்கான சூப்பர் 100 பிரிவு பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் பதிவு செய்ய இந்த இணைய தளத்தை பின்தொடரவும்" என்று http://rajinikanthfoundation.org/tnpsc.html இணையதள முகவரியை குறிப்பிட்டுள்ளார்.
முன்பதிவு ஆரம்பம்
ஒவ்வொரு வருடமும் ரஜினிகாந்த் பவுண்டேஷன் சார்பில் 100 ஏழை எளிய மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. அந்த வகையில், இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிகள் பெற முன்பதிவு செய்யும் வேலைகள் துவங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது பல மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அறிக்கை வெளியீடு
இது குறித்து வெளிவந்துள்ள அறிக்கையில், இந்திய திரைத் துறையின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி, அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயக மாற்றப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது. எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும், எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம், தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும் தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார். எனவே, இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும். நம் அறக்கட்டளை சிறிய ஆரம்பம் நிலையான முயற்சி, சுய திருத்தம் பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.